திருப்பதி லட்டு போல் தேசிய அளவில் கவனம் ஈர்த்த ஜிலேபி
திருப்பதி லட்டு விவகாரம் போல் இந்தியாவில் தற்போது ஜிலேபி பேசுபொருளாகியுள்ளது. இதற்கு காரணம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
திருப்பதி திருமலை கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், மாட்டுக் கொழுப்பு கலந்த நெய் கலக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்று விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹரியானா தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜிலேபி குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹோகானா என்ற இடத்தில் பேசிய ராகுல் காந்தி, தான் தரமான ஜிலேபியை சாப்பிட்டதாகவும், ஹரியானா மாநிலத்தின் சிறந்த இனிப்பு வகையான ஜிலேபியை உலகம் முழுவதும் கொண்டு செல்லலாம் என்றும் கூறியிருந்தார்.
அதாவது ஜிலேபி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்கலாம் என்றும், ஆனால், அதற்கு தேவையான கடன் உதவியை மோடி அரசு வழங்குவதில்லை என குற்றம்சாட்டினார்.
இச்சூழ்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஹரியானாவில் பாஜக 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து ராகுல் காந்தியின் வீட்டுக்கு சுமார் 600 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ ஜிலேபியை பாஜக பார்சலாக அனுப்பி வைத்துள்ளது.
இதேபோல போபாலில் பாஜகவினர் ஒருவருக்கொருவர் ஜிலேபி வழங்கி ஹரியானா தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.
அசாமில், லக்கிம்பூர் பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற பாஜக தொண்டர் ஒருவர் அங்கிருந்த நிர்வாகிகளுக்கு ஜிலேபி வழங்கினார். இவைதவிர பல்வேறு மீம்ஸ்களையும் பாஜகவினர் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நிலையில், லட்டைத் தாண்டி ஜிலேபி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.