நடுவானில் உயிரிழந்த டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் விமானி.
அமெரிக்காவின் சியேட்டல் நகரிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குச் சென்றுகொண்டிருந்த டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நியூயார்க்கின் ஜான் எஃப். கெனடி அனைத்துலக விமான நிலையத்தில் (JFK) அவசரமாகத் தரையிறங்கியது.
விமானிகளில் ஒருவர் நடுவானில் உயிரிழந்ததைத் தொடர்ந்து விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முடிவெடுக்கப்பட்டது. இச்சம்பவம் புதன்கிழமை (அக்டோபர் 9) காலை நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட ஏர்பஸ் ஏ350 (Airbus A350) ரக விமானம் உள்ளூர் நேரப்படி மாலை 7.02 புறப்பட்டதாக ஃபிளைட்அவேர் (FlightAware) தளத்தில் தகவல் இடம்பெற்றுள்ளது.
இல்செஹின் பெஹ்லிவன் எனும் 59 வயது விமானி, பயணத்தின்போது நினைவிழந்த நிலைக்குச் சென்றார் என்று டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. அவரை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் பலனளிக்காததையடுத்து விமானத்தை ஜான் எஃப் கெனடி விமான நிலையத்தில் தரையிறக்க முடிவுசெய்யப்பட்டது.
204 என்ற எண்ணைக் கொண்ட அந்த விமானம், வட கனடாவின் பாஃபின் தீவுக்கு மேல் இருந்தபோது நியூயார்க்கை நோக்கிப் பாதை மாற்றப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 5.57 மணிக்கு அந்த விமானம் நியூயார்க்கில் தரையிறங்கியது.
பாதிக்கப்பட்ட பயணிகளை மற்ற விமானங்களில் இஸ்தான்புல்லுக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.