வீட்டை விட்டு வெளியே வர எமக்கு விருப்பம் இல்லை!
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு உண்மையில் எமக்கு விருப்பமில்லை. ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஜனநாயகம் மூலம் எமது பலத்தைக் காட்ட வேண்டியிருக்கின்றது. மக்களை ஒன்றுசேர்த்து எல்லோரையும் அணிதிரட்ட வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.”
இவ்வாறு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ‘மாம்பழம்’ சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அதிருப்தியடைந்த குழுவினர் யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு என்ற பெயரில் சுயேச்சையாகக் களமிறங்கி நேற்று வெள்ளிக்கிழமை காலை வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மேற்கண்டவாறு கூறினர்.
ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற
ஈ.சரவணபவன் ஆகியோர் கூட்டாகக் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வந்தோம். அங்கே ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. தனிநபர் ஆதிக்கத்தால் அங்கிருந்து பலர் வெளியேறி விட்டார்கள். இறுதியில் தலைவரும் இராஜிநாக் கடிதம் அனுப்பிவைத்தார்.
யார் யார் விலகினார்கள் என்பதை 2009 இற்குப் பின்னர் அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லோரும் யாழ். மண்ணில் இருந்தார்கள். யாழ். மண்ணில் இல்லாத ஒருவரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு ஜனநாயகக் கட்சி என்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டை விட்டு வெளியே வருவதற்கு உண்மையில் எமக்கு விருப்பமில்லை. ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஜனநாயகம் மூலம் எமது பலத்தைக் காட்ட வேண்டியிருக்கின்றது. மக்களை ஒன்றுசேர்த்து எல்லோரையும் அணிதிரட்ட வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.
நாங்கள் தற்போது சுயேச்சையாகப் போட்டியிட்டாலும் நாளடைவில் அது கட்சியாகப் பரிணமிக்கும். ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு என்ற பெயரும் வைக்கப்பட்டு விட்டது.
எமது இலக்கு இளைஞர்கள் பயிற்றப்பட்டு ஒரே வழியில் கட்சியை வழிநடத்த வேண்டும். அதற்கான முழு முயற்சியை நாம் எடுப்போம். ஜனநாயகம் தழைத்து சர்வாதிகாரம் தோற்க வேண்டும்.” – என்றார்.