இரண்டு மணி நேரம் வானில் வட்டமடித்தபின் தரையிறங்கிய விமானம்.
திருச்சியிலிருந்து ஷார்ஜாவிற்குப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட பின்னர் விமானத்தின் சக்கரங்கள் உள்ளிழுக்கப்படுவது வழக்கம். ஆனால், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) மாலை 5.32 மணிக்குத் திருச்சியிலிருந்து ஷார்ஜா நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் சக்கரங்கள் அவ்வாறு இயங்கவில்லை.
அதனையடுத்து, சற்று நேரத்திலேயே அவ்விமானம் திருச்சி நோக்கித் திரும்பியது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சக்கரங்கள் உள்ளிழுக்கப்படாததால் அந்த விமானம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்தபடி இருந்ததாகவும் அவ்விமானத்தில் குழந்தைகள் அறுவர் உட்பட 144 பேர் இருந்ததாகவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் பல அவசர மருத்துவ வாகனங்களும் தீயணைப்பு வண்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.
இதுபோன்ற வேளைகளில் விமானத்தில் உள்ள எரிபொருளின் அளவு குறைந்த பிறகே அதனை விமானிகள் தரையிறக்குவர்.
அவ்வகையில், விமானத்திலிருந்த எரிபொருளைக் குறைத்தபிறகு உள்ளூர் நேரப்படி இரவு 7.20 மணியளவில் விமானி டேனியல் பெலிசோ அவ்விமானத்தைத் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அடுத்து அதிலிருந்த பயணிகளும் அவர்களின் உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அவ்விமானம் 25 முறை வானில் வட்டமடித்ததாகத் தமிழகச் செய்தி ஒளிவழி ஒன்று தெரிவித்தது.
இதனையடுத்து, விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கிய விமானிக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்தேன். பாதுகாப்பாக விமானத்தைத் தரையிறக்கிய விமானிக்கும் விமானக் குழுவினருக்கும் எனது பாராட்டுகள்,” என்று அவர் தமது எக்ஸ் பக்கம் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார்.