மன்னார் சதொச மனித புதைகுழி எச்சங்கள் பகுப்பாய்வுக்கு.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன் மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப்  புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் பிறபொருட்கள் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக இவ்வழக்கில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் 2018 ஆம் ஆண்டு சதொச வர்த்தக நிலைய கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதே இவ்வாறு மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இக்கட்டட வேலைகள்இடைநிறுத்தப்பட்டு இவ்விடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கும் அகழ்வு பணிகள் இடம்பெற்றது.

இதில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் பிற பொருட்கள் சேகரிக்கப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இவற்றின் மாதிரிகள் பகுப்பாய்வுக்காக எடுத்துச் செல்லப்படுவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நீதவான் நீதிமன்றில் மன்னார் நகர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட சதொச மனித புதைகுழி வழக்கு  கடந்த (07.10),திங்கள் கிழமை தொடக்கம் (11.10),வெள்ளிக்கழமை வரை, ஏற்கனவே இந்த புதைகுழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித கூட்டுத் தொகுதியோடு காணப்பட்ட வேறு பொருட்கள் பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றின் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தவற்றை பகுப்பாய்வுக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றன.

இந்த ஐந்து நாட்களும் பேராசிரியர் ராஜ்சோமதேவா குழுவினர் சட்டவைத்திய அதிகாரி மற்றும் குழுவினர்,

காணாமல்போன அலுவலக அலுவலர்கள்,பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகிவரும் சட்டத்தரணிகள்,மற்றும் நீதிமன்ற அலுவலர்கள்இணைந்து,

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித்  முன்னிலையில் தரம் பிரிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றது.

கண்டு பிடிக்கப்பட்ட எழும்புக் கூடுகள் வேறாகவும்  அதனோடு கண்டுபிடிக்கப்பட்ட பிறப்பொருட்கள் வேறாகவும் பிரித்தெடுக்கப்பட்டுப் பொதி செய்யப்பட்டு,நீதிமன்றில் இந்த ஐந்து நாட்களும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கின்றது.

இது தொடர்பாக மேலதிக விடயங்களாக இந்த மனித எழும்புக் கூடுகள் தொடர்பாக சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கைகளும் மனித புதைகுழியில் கண்டு பிடிக்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பாகவும் முள்ளாள் களனி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் தொல்பொருட்களின் அறிக்கையையும் நீதமன்றம் கோரி நிற்கின்றது.

ஆகவே இவர்கள் இது தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை (16) மன்னார் நீதவான் நீமன்றில் இவ் வழக்கு எடுக்கப்படுகின்றபோது  உரிய சான்றுப் பொருட்களை தங்கள் நிறுவனங்களுக்கு  எடுத்துச் சென்று இவற்றை அகழ்வாராய்ச்சி செய்து இவைகள் எக்காலப் பகுதிக்கு உரியவை என்றும் இறப்புக்குக்கான காரணம் வயது , பால் போன்ற விடயங்கள் சம்பந்தமான அந்தலபோலஜி அறிக்கையையும் நீதிமன்றில் சமர்பிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இதற்கான கால அவகாசம் எதிர்வரும் புதன்கிழமை (16.10) மன்னார் மாவட்ட நீதவான் நீதமன்றில் இவ் வழக்கு எடுக்கப்படுகின்றபோது தெரிவிக்கப்படும் எனவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்னார் மனித புதைகுழி வழக்கில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மேலும் தெரிவித்தார்.

இதே வேளையில் கடந்த திங்கட் கிழமை (07.10) இவ் வழக்கு மன்னார் நீதவான் நீதமன்றில் எடுக்கப்பட்டிருந்த பொழுது கடந்த புதன்கிழமை (09.10) மன்னார் சதொச மனித புதைகுழி அமைந்துள்ள இடத்தை அண்டிய  ஒரு சில இடங்களை நீதவான் முன்னிலையில் பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் தலைமையில் அகழ்வு செய்து பரிசோதித்த செயற்பாடும் இடம்பெற்றது  குறிப்பிடத்தக்கது.

 

ரோகினி நிஷாந்தன்

Leave A Reply

Your email address will not be published.