20 அடி உயர சுவற்றை ஏறிக் குதித்து தப்பிய கைதிகள்.
அசாமில் சிறைச்சாலையில் இருந்து ஐந்து விசாரணைக் கைதிகள் 20 அடி உயர சுவற்றை ஏறிக் குதித்து தப்பியோடியுள்ளனர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு மோரிகான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சைபுதீன், ஜியாருல் இஸ்லாம், நூர் இஸ்லாம், மபிதுல், அப்துல் ரஷீத் ஆகியோர் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 முதல் 2 மணி அளவில் சிறையிலிருந்து கம்பியை உடைத்து வெளியேறியுள்ளனர். பின்னர் படுக்கையுறை, போர்வை, லுங்கி ஆகியவற்றைக் கயிறாகத் திரித்து 20 அடி உயரச் சுவரில் ஏறித் தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பிரசாந்தா சைகியா என்ற சிறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தப்பியோடிய கைதிகளைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர்களுடன் இருந்த மற்ற சிறைக்கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதுடன் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. சிறையைச் சுற்றியுள்ள தடுப்புச் சுவர்கள் மிகவும் உயரமாக இருப்பதுடன் மின்வேலியும் உள்ளது. மேலும் காவல்துறையினர் கண்காணிப்பும் இருக்கும். இவற்றையெல்லாம் கடந்து ஐவரும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.