தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் சுட்டுக் கொலை (Video)
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் மர்ம நபர்களால் சனிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் பாபா சித்திக்கின் மகனுமான ஜீஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு சனிக்கிழமை இரவு பாபா வருகை சென்றிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பாபா சித்திக்கை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்திக், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபா சித்திக் யார்?
48 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த பாபா சித்திக், மூன்று முறை பாந்த்ரா மேற்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். இந்த ஆண்டு பிப்ரவரியில், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் இருந்து விலகினார்.
பின்னர் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் சேர்ந்தார்.
இதையும் படிக்க | 50 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய ஏரி… சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்!
துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம்?
அதிகளவில் குடிசைப் பகுதிகளை கொண்ட பாந்த்ராவில் அண்மையில் நடந்த குடிசை மறுமேம்பாடு திட்டத்துக்கும், சித்திக் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் மறுசீரமைப்பு திட்டத்தால் பதற்றம் நிலவி வரும் நிலையில், மர்ம நபர்கள் சித்திக் மீது இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சித்திக்கின் மார்பு பகுதியில் துப்பாக்கி குண்டுகள் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.