மாநாட்டுக்கு முன் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation) மாநாடு எதிர்வரும் அக்டோபர் 15 முதல் 16 வரை நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகள் அக்டோபர் 13ஆம் தேதி நாட்டின் தலைநகரத்தை முழுமையாக மூடத் தயாராகி வருகின்றனர்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ரஷ்யப் பிரதமர் மிக்கேல் மிஷுஸ்டின், சீனப் பிரதமர் லீ கியாங் ஆகியோர் உள்பட மூத்த வட்டார அரசாங்க அதிகாரிகள் பலர் மாநாட்டுக்கு வருகைபுரிய உள்ளனர்.
இன தேசியவாத இயக்கம் ஒன்றுக்குத் தடைவிதித்தல், தலைநகரில் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துதல் என மாநாட்டுக்கு முந்தைய வாரங்களில் பாகிஸ்தான் அதிகாரிகள் பல்வேறு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மாநாடு நடைபெறும் நாள்களில் சாலைகளில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்படுவதையும் பாகிஸ்தான் அனுமதித்துள்ளது.
இதற்கிடையே, “பாதுகாப்பானது எனக் கருத இடமில்லாத” ஒரு நாட்டில் மாநாடு நடைபெறுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்று பாதுகாப்புப் பகுப்பாய்வாளர் திரு இம்டியாஸ் கல் கூறியுள்ளார்.
விரும்பத்தகாத சம்பவம் ஏதுமின்றி மாநாடு அமைதியான முறையில் நடந்தேறுவதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த முயல்வதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் அவர் தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் நாடுகள் உள்ளன.