ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட 7 சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தல்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் உட்பட கடந்த காலத்தில் இடம்பெற்ற 7 சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் , பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இது தொடர்பில் நீண்ட விளக்கமளித்தார்.
“பொது பாதுகாப்பு அமைச்சு, பல விசேட விசாரணைகளுக்கு விசேட கவனம் செலுத்தி விரைவாக செயற்படுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டு பணிப்புரைகளை வழங்கியுள்ளது.
குறிப்பாக, திறைசேரி பிணை முறி தொடர்பான விசாரணைகள், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை துரிதமாக நடத்தி, அதிகளவான அதிகாரிகளை ஈடுபடுத்தி, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என எமக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளது.
அத்துடன் 2007ஆம் ஆண்டு களனி கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் ரவீந்திரநாத் சுப்ரமணியம் காணாமல் போன சம்பவம் , தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலை என தெரியவந்த சம்பவம் ஆகியன குறித்து முழுமையாக விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
மேலும், 31.12.2023 அன்று வெலிகம W 15 ஹோட்டலுக்கு முன்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெலிகம பொலிஸ் அதிகாரிகளினால் உயிரிழந்த சம்பவம்.
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கடத்தப்பட்டு 28.4.2005 அன்று மரணமடைந்த தர்மரட்ணம் சிவராம் என அழைக்கப்படும் பாரதி சிவராமின் மரணம் தொடர்பான விசாரணைகள்.
மேலும் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி யாழ்ப்பாணம் பகுதியில் காணாமல் போன லலித்குமார் மற்றும் குகன் முருகநாதன் என்ற இருவர் பற்றிய சம்பவங்கள் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார் .