ஜி.என்.சாய்பாபா மரணம்: மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த இவர் யார்?
டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழக (நிம்ஸ்) மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை காலமானார்.
அவருக்கு வயது 57. ஜி.என்.சாய்பாபாவுக்கு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட உடல்நல பிரச்னைகள் காரணமாக அவர் நிம்ஸில் சிகிச்சை பெற்று வந்தார்.
பேராசிரியர் சாய்பாபா, சக்கர நாற்காலி உபயோகிக்கும் மாற்றுத்திறனாளி ஆவார். அவர், மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தபோது, உச்சநீதிமன்றம் 24 மணிநேரத்திற்குள் அந்தத் தீர்ப்பை ரத்து செய்தது. ஆனால், இறுதியாக மும்பை உயர்நீதிமன்றம் அவரை மார்ச் 2024இல் விடுவித்தது. அந்த நேரத்தில், அவர் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
விடுதலையான போது சாய்பாபா கூறியது என்ன?
பேராசிரியர் சாய்பாபா 90 சதவீத மாற்றுத்திறனாளி பிரிவில் வருபவர். அவரது அன்றாட வாழ்க்கையில் சக்கர நாற்காலி மட்டுமே அவருக்கு ஆதரவாக இருந்தது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் விடுதலையான நேரத்தில், பிபிசியிடம் பேசும்போது, தான் சிறையில் சந்தித்த அசௌகரியங்களைக் குறிப்பிட்டார்.
“சிறையில் உள்ள கழிப்பறைக்கு சக்கர நாற்காலியால் செல்ல முடியவில்லை, குளிக்கக்கூட இடம் இல்லை, தனியாக கால் ஊன்றி நிற்க முடியவில்லை. கழிவறை செல்லவும் குளிக்கவும் மீண்டும் படுக்கைக்குச் செல்வதற்கும் எனக்கு 24 மணிநேரமும் இரண்டு பேர் தேவை” எனக் கூறியிருந்தார்.
ஜி.என்.சாய்பாபா, யுஏபிஏ சட்டம் ‘இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது’ என்று கூறினார். அவர் அதை ‘உலகின் மிகக் கொடூரமான சட்டம்’ என்று அழைத்தார்.
“உலகில் எந்த நாட்டிலும் இதுபோன்ற கொடூரமான சட்டங்கள் தற்போது நடைமுறையில் இல்லை என்று அவர் கூறியிருந்தார். இது அரசியலமைப்புச் சட்டம் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது” என்று அவர் கூறியிருந்தார்.
“இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறேன், இந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். என் குரல் ஒடுக்கப்பட்டது” என்று கூறியிருந்தார். அப்போது, சிறையில் தன்னுடைய உடல்நிலை மோசமானது குறித்தும் ஜி.என்.சாய்பாபா பேசினார்.
‘மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளும், சிகிச்சைகளும் தனக்கு அளிக்கப்படவில்லை’ என சாய்பாபா குற்றம் சாட்டியிருந்தார்.
“இன்று நான் உங்கள் முன் உயிருடன் இருக்கிறேன், ஆனால் என் உடலின் ஒவ்வொரு பாகமும் செயலிழந்து கொண்டிருக்கிறது. நான் உயிர் பிழைப்பேன் என சிறை அதிகாரிகள் நம்பவில்லை” என்று அவர் கூறியிருந்தார்.
சிறையில் மிகவும் கஷ்டப்பட்டதாக அவர் கூறியிருந்தார். அவருக்குப் பல நோய்கள் ஏற்பட்டன. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, முதலில் தனக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர் விரும்பினார்.