மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவோரை வாழ்த்திய தென்னிந்திய திருச்சபையின் யாழ். ஆதீன முதல்வர்.
ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு காலத்தின் தேவை என வலியுறுத்திய தென்னிந்திய திருச்சபையின் யாழ். ஆதீன முதல்வர் கலாநிதி வேலுப்பிள்ளை பத்மதயாளன், அந்தக் கட்டமைப்பு தமிழ் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை படைக்க வேண்டும் எனவும் வாழ்த்தினார்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் நேற்று மாலை தென்னிந்திய திருச்சபையின் யாழ். ஆதீன முதல்வரைச் சந்தித்து ஆசி பெற்றனர்.
இதன்பின்னர் சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே தென்னிந்திய திருச்சபையின் யாழ். ஆதீன முதல்வர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய செயற்பாடுகள் பொருத்தமற்று காணப்படுவதாலும் போதிய வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தாலும் புதிய கட்டமைப்பு மக்களால் வரவேற்கப்படுகின்றது.
அதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் என சமுதாய விழிப்புணர்வை விரும்பும் தலைவர்கள் இருப்பதைப் பாராட்டுகின்றோம்.
பேராயராக ஒரு விடயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழ் மக்களின் வாழ்வியலுக்காக இதயசுத்தியுடன் பாடுபடும் எந்தத் தலைவனையும் நான் உண்மையிலேயே தலைவணங்குகிறேன். ஏனென்றால் அது காலத்தின் தேவை. எமது மக்களின் வாழ்வியலைப் பாதுகாக்க புதிய கட்டமைப்பு உண்மையிலேயே பாடுபடும் என எதிர்பார்க்கின்றேன்.
வாக்காளர்கள் யாரையும் எதிர்க்க வேண்டும் எனக் கூறவில்லை. மாற்றத்தை உணர்ந்து உண்மைகளை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். இது எமது தலையில் விழுந்துள்ள பாரிய பொறுப்பு.
இந்தக் கூட்டமைப்பு சிறந்து விளங்கி நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்துக்கும் உண்மைக்கும் நீதி நியாயத்தை வெளிப்படுத்தி தமிழ் மக்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து சகோதர சிங்கள, முஸ்லிம் இனங்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்காக அனைத்து மக்களும் பாடுபட்டு வாக்களிக்க வேண்டும் என மனதார வேண்டுகிறேன்.” – என்றார்.
இந்தச் சந்திப்பில் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடக்கு மாகாண முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், விமலேஸ்வரி, நாவலன், குணாளன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அதிருப்தி அடைந்த குழுவினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு என்ற பெயரில் சுயேச்சையாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.