அநுர அரசுடன் சேர்ந்து செயற்பட வடக்கு அரசியல் கட்சிகள் தயாராம் – ஜனாதிபதியிடம் முக்கிய தமிழ்த் தலைவர் ஒருவர் கூறினாராம்.
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் அரசுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடலொன்று தலவத்துகொட கிறேன்ட் மொனார்க் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“குற்றச்சாட்டுக்களிலிருந்து நாடாளுமன்றத்தை விடுவிப்பதற்கான சிறந்தவொரு சந்தர்ப்பமே பொதுத் தேர்தல்.
வடக்கின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரைச் சந்தித்தபோது, வடக்கு மக்கள் எம்முடன் இணைந்து செயற்படத் தயாராகவுள்ளனர் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றம் வலுவான பிரதிநிதித்துவத்தையும் பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், நாடாளுமன்றம் மக்களின் சொத்துக்களை வீணடிக்கும் இடமாக முத்திரை குத்தப்பட்டுள்ளது.
எனவே, நாட்டுக்காக சில தீர்மானங்களை அமுல்படுத்துவதற்குத் தேவையான பலமான அரசியல் பலத்தை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெற வேண்டும்.
பலமான அரசியல் தலைமைத்துவம் கொண்ட பொறிமுறையொன்றை நாம் பெற்றால் மாத்திரமே புதிய வேலைத்திட்டத்தை யதார்த்தமாக்க முடியும்.
ஜனாதிபதி உட்பட மூவர் கொண்ட அமைச்சரவையே உள்ளது. மாற்றத்தை உண்மையாக்க இது எந்த வகையிலும் போதுமானது இல்லை.
புதிய பலமான அரசியல் சக்தி ஸ்தாபிக்கப்படும் வரை ஓர் இடைக்கால அமைச்சரவையில் மூவர் உள்ளோம்.
இந்த இடைநிலை கட்டத்தில், நாம் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் பல உள்ளன.
சில தீர்மானங்களையும் நடவடிக்கைகளை எடுக்கவும் வலுவான அரசியல் சக்தி இருக்க வேண்டும்.” – என்றார்.