சின்னத்தைத் திருடியோருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் – தமிழரசின் முன்னாள் எம்.பி. சுமந்திரன் வலியுறுத்து.
“ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி சேர்த்து வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் திருந்தவில்லை. முன்னர் கட்சிப் பெயரைத் திருடினார்கள் இப்போது சின்னத்தையும் திருடியுள்ளார்கள்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்று மாலை யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“1956 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பிரதான தமிழ்க் கட்சியாக இருப்பது இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டுமே. வேறு எவருக்கும் எங்களுடைய மக்கள் ஜனநாயக ஆணையைக் கொடுக்கவில்லை. இனியும் கொடுக்கப் போவதுமில்லை.
தமிழ் மக்கள் ஒரு தனித் தேசம் என்று அறிவித்து இதுவரை காலமும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற கட்சிதான் பலமான அணியாக நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும்.
மத்தியிலே ஆட்சி அமைத்திருக்கக்கூடிய கட்சிக்கு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலே ஓர் ஆசனம் கிடைக்குமாக இருந்தால் அவர்கள் இங்கிருக்கும் மக்கள் எங்களையும் பிரதிநிதியாக ஏற்றிருக்கின்றார்கள் என்பதனைச் சொல்லுவார்கள். அதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.
ஜனாதிபதித் தேர்தலோடு ஓர் ஆபத்து வந்திருக்கின்றது. பல தடவைகள் நாங்கள் அபாயச் சங்கை ஊதினோம். அது கைமீறிவிட்டது. பொதுவான சின்னத்தையும் திருடி விட்டார்கள். சின்னத்தைத் திருடியவர்கள் அதற்கு முன்னர் எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைத் திருடினார்கள். திருடுவது என்பது அவர்களுடைய வாழ்க்கை வழிமுறையாகவே இருந்திருக்கின்றது.
ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சேர்த்து வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் திருந்தவில்லை.
கட்சிப் பெயரைத் திருடினார்கள். மக்களுக்குப் பொய்யான நம்பிக்கையை ஊட்டி அந்தச் சின்னத்தையும் திருடி விட்டார்கள். கடந்த மாதம் 23ஆம் திகதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கு முன்னர் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சங்கு சின்னத்தைத் தாம் பயன்படுத்த மாட்டோம் என்று. அவர்களுக்கு தங்களின் கையெழுத்தின் பெறுமதி தெரியவில்லை.
சின்னத்தைத் திருட மாட்டோம் என்று கையெழுத்திட்டவர்கள் ஒரு சில மணித்தியாலங்களுக்கு உள்ளேயே குத்துவிளக்கைக் கைவிட்டு சங்கைத் தருமாறு தேர்தல் திணைக்களத்துக்குக் கடிதம் கொடுத்தார்கள். இவ்வாறான கள்ளருக்கு இம்முறை மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். மாம்பழத் திருடர்களுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
எங்கள் கட்சியிலிருந்து வெளியேறிய ஒருவர் அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலை உரிமம் கொடுத்தேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார்.
ஊழலுக்கு எதிரான அரசு என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய இந்த அரசு இரண்டு விடயங்களில் தடுக்கி விழுந்து கொண்டிருக்கின்றது. ஒன்று ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான செலவீனங்களைத் தேர்தல் திணைக்களத்துக்கு இதுவரை கொடுக்கவில்லை. மற்றையது மதுபான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றவர்களின் பெயர் விவரங்களை மூன்று நாட்களுக்குள் வெளிப்படுத்துவோம் எனக் கூறினார்கள். மூன்று வாரமாகிவிட்டது, இன்னும் வெளிப்படுத்தவில்லை.
நான் பகிரங்கமாக அரசுக்குச் சவால் விடுகின்றேன் மதுபான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றவர்களின் விபரங்களை வெளிப்படுத்துங்கள். எங்களுடைய கைகள் சுத்தமாக உள்ளது. எங்களை விட்டு வெளியேறிச் சென்றவர்களின் உண்மை முகத்தை மக்களிடம் வெளிக்காட்ட உதவியாக இருக்கும். ஏன் எங்களை விட்டு வெளியேறினார்கள் என்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கும்.
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவிலே நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம். இளையவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கியிருக்கின்றோம். மக்கள் கேட்கின்ற மாற்றத்துக்கு நாங்கள் இடம் கொடுத்திருக்கின்றோம். அதற்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறியிருக்கின்றார்கள். தேர்தலில் ஆசனங்கள் கிடைக்கவில்லை என்பதற்காகத் தேர்தல் காலங்களில் வெளியேறியிருக்கின்றார்கள்.
கொள்கைப் பிடிப்பில் வெளியேறுவதெனில் தேர்தல் காலத்தில் வெளியேறாமல் வேறு நேரத்தில் வெளியேறிருக்கலாம். தேர்தல் காலங்களில் வெளியேறுவர்களைக் குறித்து மக்களுக்கு அவதானம் இருக்கின்றது. அதனை நாம் மக்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அவர்களை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதத் தேவையில்லை.” – என்றார்.