மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றது பொதுக்கட்டமைப்பு.
“சங்கு சின்னத்துக்காகத் தற்போது அதே சின்னத்திள் போட்டியிடுபவர்கள் மட்டும் உழைக்கவில்லை. பலரின் உழைப்பு அதில் உண்டு. தேச திரட்சியை உருவாக்க முயன்று வெற்றி கண்டு சில நாட்களில் அது சிதறுண்டு போயுள்ளது. அதற்காக நாம் மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம். அத்துடன் பொதுக்கட்டமைப்பும் தற்போது இல்லை.”
இவ்வாறு பொதுக்கட்டமைப்பின் முக்கியஸ்தரும் எழுத்தாளருமான நிலாந்தன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்கள் பொதுச் சபை ஜனாதிபதி தேர்தலைக் கையாண்டது போன்று ஏனைய தேர்தல்களைக் கையாள முடியாததால் நாடாளுமன்றத் தேர்தலில் விலகி இருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் பாவித்த சங்கு சின்னத்தைப் பாவிக்க வேண்டாம் எனக் கோரினோம். கட்சிகள் சங்கு சின்னத்தை எடுக்காது இருந்திருக்கலாம். அதனையும் மீறி எடுத்துள்ளார்கள்.
சங்கு சின்னத்துக்கும், தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும், பொதுக் கட்டமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தமிழ் மக்கள் பேரவையின் கூர்ப்பாகவே தமிழ் மக்கள் பொதுச் சபையாகும். பொதுச் சபை அடுத்த கூர்ப்புக்குப் போன பின்னரே தேர்தல்களை எதிர்கொள்ள முடியும்.
தமிழ் மக்கள் பொதுச் சபை ஜனாதிபதித் தேர்தலில் தேச திரட்சியை எதிர்பார்த்து, அதில் வெற்றியும் பெற்றோம். அது சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புடன் சிதறியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பலம் தமிழ் மக்கள் பொதுச் சபையிடம் இல்லாததால், அதில் இருந்து விலகி இருக்கின்றோம். எனவே, மக்கள் நாணயமானவர்களுக்கும் கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்.
சங்கு சின்னம் புனிதமானது இல்லை. அதற்கு யாரும் உரிமை கோர முடியாது. அது ஒரு பொது நிலைப்பாட்டுக்கான குறீயிடு. பொதுக் கட்டமைப்பில் இருந்த பலர் வெளியில் நிற்கும்போது சிலர் மட்டும் அதனைப் பயன்படுத்துவது அறம் இல்லை.
சங்கு சின்னத்துக்காகத் தற்போது அதே தேர்தலில் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் மட்டும் உழைக்கவில்லை. பலரின் உழைப்பு அதில் உண்டு. தேர்தல் பிரச்சாரத்துக்குப் பலர் முன்னரங்கில் வந்து உழைக்காமல் பின்னின்று உழைத்தவர்களும் உண்டு.
தேச திரட்சியை உருவாக்க முயன்று வெற்றி கண்டு சில நாட்களில் அது சிதறுண்டு போயுள்ளது. அதற்காக நாம் மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம். அத்துடன் பொதுக் கட்டமைப்பும் தற்போது இல்லை.” – என்றார்.