ராமாயண நாடகத்தில் குரங்கு வேடமிட்டு சீதையைத் தேடுவதுபோல் நடித்து இரண்டு கைதிகள் தப்பியோடிய அதிசயச் சம்பவம்.
சிறைச்சாலைக்குள் நடத்தப்பட்ட ராமாயண நாடகத்தில் குரங்கு வேடமிட்டு சீதையைத் தேடுவதுபோல் நடித்து இரண்டு கைதிகள் தப்பியோடிய அதிசயச் சம்பவம் உத்தராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
அந்த மாநிலத்தின் ஹரித்வார் சிறையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) மாலை கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. நன்மை செய்வதன் மூலம் தீமையை எவ்வாறு வெல்லலாம் என்பதை நாடகம் மூலம் கைதிகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக அந்த நாடகத்திற்கு சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
அந்த நாடகத்தில் அனுமாரின் வானரச் சேனையில் இடம்பெறும் குரங்குகளாக வேடமிட்டு இரண்டு கைதிகள் நடித்தனர். அவர்கள் இருவரும் சீதையைத் தேடுவதுபோல், மெதுவாக நாடக அரங்கைவிட்டு வெளியே சென்றனர்.
பின்னர் மின்னல்வேகத்தில் அங்கிருந்து ஓடி, கட்டுமானப்பணிக்காகச் சிறையில் வைத்திருந்த ஏணியைப் பயன்படுத்தி சிறைச் சுவரைத் தாண்டிக் குதித்து இருவரும் தப்பினர்.
சீதையைத் தேடச் சென்ற இரு குரங்கு வேடமிட்டவர்களும் நீண்ட நேரமாகத் திரும்பி வராததால் அவர்கள் தப்பியோடியதைச் சிறை அதிகாரிகள் உணர்ந்தனர்.
தப்பிய கைதிகளில் ஒருவரின் பெயர் பங்கஜ். கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றவர். ராஜ்குமார் என்னும் மற்றொரு கைதி ஆட்கடத்தல் குற்றத்திற்காக விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டவர்.
இருவரும் சிறையிலிருந்து தப்பிக்க வெகு நாள்களாகத் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது. தப்பி ஓடிய கைதிகளைத் தேடும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆறு சிறைப் பணியாளர்கள் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.