உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் விழுந்த பெண் மரணம்.
உல்லாசக் கப்பலில் இருந்த ஒரு பெண் பயணி, சேனல் தீவுகள் அருகே கடலில் விழுந்ததை அடுத்து உயிரிழந்துவிட்டார் என்று பிரெஞ்சு மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 6,300க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யக்கூடிய ‘எம்எஸ்சி வெர்ச்சுவோசா’ (MSC Virtuosa) உல்லாசக் கப்பலில், அக்டோபர் 12ஆம் தேதி 20களில் உள்ள பெண் ஒருவரைக் கண்டுபிடிக்குமாறு தகவல் கிடைத்தது.
பயணி ஒருவர் கடலில் விழுந்துவிட்டது குறித்து எச்சரிக்கை ஒலி மூன்று முறை ஒலித்ததாக பிபிசி செய்தி நிறுவனத்திடம் பயணி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து, கடலில் விழுந்த பெண்ணை ஹெலிகாப்டர் பணியாளர்கள் சிலர் மீட்டதாகவும் பெண் இறந்துவிட்டதைப் பின்னர் மருத்துவர்கள் உறுதிசெய்ததாகவும் பிரான்சின் தேடி மீட்கும் படையினர் குறிப்பிட்டனர்.
காணாமல் போன ஒரு பயணியைத் தேடி வருவதால் கப்பல் சவுத்ஹேம்டனில் தாமதமாகும் என்று உல்லாசக் கப்பலை இயக்கியவர் பயணிகளுக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பிரெஞ்சு காவல்துறையினர் தலைமையில் பெண்ணின் மரணம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.
உல்லாசக் கப்பல் 19 மாடிகள் உயரம் கொண்டது என்றும் பிரான்சில் 2020ல் கட்டப்பட்டது என்றும் அறியப்படுகிறது.