மூத்தோர் மருத்துவக் காப்பீட்டு சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம்
மத்திய அரசின் மூத்தோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவச சிகிச்சை அளித்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பத்திலுள்ள மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை (AB-PMJAY) மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு பெறமுடியும்.
இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் இணைந்து பயன்பெற்று வருகின்றன.
வருமான வரம்பின்றி அனைவருக்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் 6 கோடி மூத்த குடிமக்களை உள்ளடக்கிய ஏறக்குறைய 45 மில்லியன் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதில் இணைவோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணமின்றி சிகிச்சையளிக்கப்படும்.
அதற்காக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அதிகமானோருக்கு இலவச சிகிச்சை அளித்த மாநிலங்களில் தென்மாநிலங்கள் முன்னணி வகிக்கின்றன.
அதிலும் குறிப்பாக, தென் மாநிலப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
திட்டம் நடப்புக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் 9.05 மில்லியன் பேருக்கு ஆயுஷ்மான் திட்ட அங்கீகார மருத்துமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது.
அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் கர்நாடகா (6.60 மில்லியன்), கேரளா (5.46 மில்லியன்), ஆந்திரப் பிரதேசம் (4.96 மில்லியன்) என இடம்பிடித்து உள்ளதாக ஆயுஷ்மான் திட்டத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் ஆயுஷ்மான் திட்டத்திற்கான அட்டைகளைத் தயாரிப்பதில் தென்மாநிலங்கள் பின்தங்கி உள்ளன.
நாடு முழுவதும் அந்த சுகாதாரக் காப்புறுதி அட்டைகளைத் தயாரித்த 10 மாநிலங்களில் கர்நாடகா (17.5 மில்லியன் அட்டைகள்), ஆந்திரப் பிரதேசம் (15.6 மில்லியன்) அட்டைகளைத் தயாரித்து முறையே எட்டாவது, பத்தாவது இடத்தில் உள்ளன.
2021ஆம் ஆண்டு திட்டத்தில் இணைந்த தெலுங்கானா 8.29 மில்லியன் அட்டைகளைத் தயாரித்து உள்ளது. ஆனால், 7.54 மில்லியன் அட்டைகளைத் தயாரித்து பட்டியலின் கடைசி இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
இருப்பினும், கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் அதிகமான நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்த மாநிலங்களில் தமிழ்நாடும் கேரளாவும் முன்னணியில் உள்ளதாக மத்திய சுகாதார, குடும்ப நல்வாழ்வு அமைச்சு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.