மகாராஸ்டிர அமைச்சரின் கொலைக்கு பொறுப்பேற்ற பிஸ்னோய் குழு

இந்தியாவின் மகாராஸ்டிர மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டமைக்கு, சிறையில் உள்ள குற்றக்குழுவின் தலைவரான லோரன்ஸ் பிஸ்னோயின் குழு பொறுப்பேற்றுள்ளது.

பாபாவுக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையிலும் நேற்று முன்தினம்(14.10.2024)துப்பாக்கித்தாரிகளால் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ள பிஸ்னோய் குழு ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கும் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சல்மான் கானின் பாதுகாப்பு
இதனையடுத்து சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சல்மான் கானுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரையில், தெரியவரவில்லை.

எனினும், பாபா சித்திக்கின் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதற்காக அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்றுள்ள பிஸ்னோய் குழு, தமது முகப்புத்தக பதிவில், “ஓம், ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் பாரத். நான் வாழ்வின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டு செல்வத்தையும் உடலையும் மண்ணாகக் கருதுகிறோம்.

முகப்புத்தக பதிவு
நட்பின் கடமையை மதித்து, சரியானதை மட்டுமே செய்தோம்.

எங்களுக்கு யாருடனும் தனிப்பட்ட விரோதம் இல்லை. இருப்பினும், சல்மான் கான் அல்லது தாவூத் குழுவுக்கு உதவி செய்பவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

எங்கள் சகோதரர்கள் யாரேனும் கொல்லப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம். நாங்கள் முதலில் தாக்குவதில்லை.” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த பதிவின் உண்மைத்தன்மை குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.