ஆயுதங்கள் மௌனித்த பின் , அரசியலே ஒரே வழி : புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் (Video)
நாங்கள் ஒரே கொள்கை ஒரே நோக்கோடு மக்களுக்காக வாழ்ந்தவர்கள். எனவே மக்கள் பட்ட அவலங்களை அறிந்தவர்கள் என்ற வகையில் முற்றும் முழுதாக மக்களுக்காகவே செயற்படுவோமென புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க. இன்பராசா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தினம் (14.10) திங்கட்கிழமை,காலை அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு இன்று பதினைந்து வருடங்கள் கடந்தும் இன்னும் மக்கள் அவலமானதொரு வாழ்க்கையே வாழுகின்றனர். எமது முன்னாள்ப் போராளிகளும் அவ்வாறான ஒரு வாழ்க்கையே வாழுகின்றனர்.
இந்நிலையில் மக்களுக்காக ஏதோ செய்துவிட வேண்டும் என்ற நோக்கிலேயே நாங்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டுமென நினைக்கிறோம். எங்களது கஸ்டங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லாது நாம் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமென்ற உணர்வு உள்ளத்தில் உறுத்திக் கொண்டேயுள்ளது.
மக்களுக்காக மரணித்த 50 ஆயிரம் போராளிகளின் பெற்றோருக்கு நாங்கள் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்று கவலையடைகிறோம்.
யுத்தத்தில் இறந்த போராளிகள் மற்றும் மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக நாம் பாராளுமன்றத்தில் பேசுவோம். மற்றைய அரசியல் வாதிகளைப் போல் இங்கு ஒரு பேச்சு பாராளுமன்றத்தில் ஒரு பேச்சு எனப் பேசமாட்டோம்.@ எங்களது நிலையைச் சிங்கள மக்களும் புரிந்து கொள்வார்கள். இனியொரு ஆயுதப் போராட்டம் இல்லாமல் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவே நாம் பாடுபடுவோம்.
இன்னும் இரண்டு தினங்களில் எமது தேரதல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளோம்.
மக்கள் எங்களது தியாகத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். எங்கள் தியாகத்துக்கு நன்றிக் கடனாகத் தங்களது வாக்குகளை எமக்களித்து எம்மைப் பாராளுமன்றம் அனுப்புவார்கள் என்றார்.
2024 தேர்தலில்
யாழ்பாணத்தில் தையல் மெசின் சின்னத்திலும்
வன்னி மற்றும் மட்டக்களப்பில் தொலைக்காட்சி சின்னத்திலும்
திருகோணமலையில் பந்து சின்னத்திலும் போட்டியிடுகிறோம்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்