தமிழரசின் நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்குத் தாக்கல்.

தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளருக்கு
எதிராக நீதிமன்றத்தை நாடினார் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10 ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன்போது, வழக்கைத் தொடர்ந்துள்ள மார்க்கண்டு நடராசா முன்வைத்துள்ள கோரிக்கைகளாவன 1 முதல் 3 வரையான எதிராளிகள் 27.01.2024 இற்குப் பின்னராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டியமையும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்புக்கு முரணானவை என்ற வகையில் வெற்றும் வெறிதானவையும் என்ற கட்டளைக்கும் தீர்ப்புக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், 1ஆம் மற்றும் 2ஆம் எதிராளிகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு என்ற பெயரில் எவ்வித கூட்டங்களையும் கூட்டக்கூடாது என்ற இடைக்காலத் தடை விதிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 1ஆம் எதிராளி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற கோதாவில் செயற்படக்கூடாது என்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2ஆம் எதிராளி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற கோதாவில் செயற்படக் கூடாது என்று இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறும் வழக்காளியின் சார்பில் வேண்டுதல் முன்வைக்கப்பட்டுள்ளது.

வழக்காளி சார்பில் சட்டத்தரணி த.டினேஷ் மன்றில் ஆஜரானார். இந்த வழக்கின் அடுத்த தவணை நவம்பர் 18 ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.