துப்பாக்கிக் குண்டைத் தடுத்து உயிரைக் காத்த கைப்பேசி.
கால்சட்டையில் வைத்திருந்த கைப்பேசியால் ஆடவர் ஒருவர் உயிர்தப்பிய சம்பவம் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நிகழ்ந்துள்ளது.
டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையே சில நாள்களுக்குமுன் சண்டை மூண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
இதனையடுத்து, “சச்சரவைத் தீர்க்கும் நோக்கில் சாந்தி என்ற பெண், தன் மகன்கள் அர்ஜூன், கமல், மைத்துனர் ஜிதேந்தர் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 13) எதிர்த்தரப்பினரைச் சந்திக்கச் சென்றார். அப்போது, சத்னம், சாஹில், நசீப், ரித்திக் ஆகியோரால் அவர்கள் அடித்து விரட்டப்பட்டனர்,” என்று காவல்துறை அறிக்கை கூறியது.
சண்டையின்போது, கமலும் ஜிதேந்தரும் வற்புறுத்தியதை அடுத்து கைத்துப்பாக்கியை எடுத்த அர்ஜூன், ரித்திக்கை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு ரித்திக்கின் கால்சட்டைப் பையிலிருந்த கைப்பேசியைத் தாக்கியது.
இதனால், நல்லவேளையாக ரித்திக் காயமின்றி உயிர்தப்பினார்.
இச்சம்பவம் தொடர்பில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.