கோடீஸ்வர மருமகனை உலக்கையால் அடித்துக் கொன்ற மாமனார்.
பலாங்கொடை தஹமன பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை தனது வீட்டில் வைத்து கொலை செய்த 65 வயதுடைய மாமனார் கைது செய்யப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (11) இந்த சந்தேகநபர் உலக்கையால் தலையில் அடித்ததில் மகளின் கணவர் கொல்லப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான மாமனார் இதய நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்டவர் பலாங்கொடை தஹமன பிரதேசத்தைச் சேர்ந்த மிகஹவெல லெக்மிலகே விஜேகுமார என்ற 44 வயதுடைய கோடீஸ்வர வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் வைத்திய அறிக்கைகளின்படி, அடிபட்டதில் மண்டையோடு மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக உள்ளக இரத்தப்போக்கு ஏற்பட்டு மரணமித்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வீட்டில் இறந்தவரின் மனைவியின் தாயும் (மாமியார்) சில காலம் தங்கியிருந்த நிலையில், சம்பவத்தன்று மதியம் இந்த வீட்டுக்கு இறந்தவரின் மனைவியின் தந்தை (மாமா) வந்துள்ளார்.
உயிரிழந்த விஜேகுமார என்ற நபர், மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையாக மாறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் போது, மனைவியின் தந்தை, உலக்கையால், தாக்கியதில், மகளின் கணவர் விஜேகுமார, வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்றிரவே, பலாங்கொடை நீதவான் தில்ரக்ஷி விக்கிரமசிங்கவினால் விசாரணை நடத்தப்பட்டதுடன், இரத்தினபுரி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (SOCO) ஸ்தல விசாரணையையும் மேற்கொண்டனர்.
கொலையை செய்த சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இதன்படி, மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், உயிரிழந்தவரின் மனைவியின் தந்தையான 65 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கொலை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மாமா, தனது மகளுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்த மருமகனது தொல்லையை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்தக் கொலைச் செய்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.