“கோசாலையை சுத்தம் செய்தால் புற்றுநோய் சரியாகும்”…அமைச்சர் சர்ச்சை!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் கரும்பு வளர்ச்சித் துறை அமைச்சராக பாஜகவைச் சேர்ந்த சஞ்சய் சிங் கங்குவர் இருந்துவருகிறார்.
இவர், உத்தரபிரதேசத்தின் நௌகாவா பகடியா பகுதியில் ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கன்ஹா கோசாலையை திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ரத்த அழுத்தம் கொண்டவர்கள் மாட்டின் பின்புறத்தில் தினமும் காலை மாலை என தடவி கொடுத்து வந்தால். அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்தத்தைக் குறைக்க 20 எம்.ஜி. மாத்திரை உட்கொண்டுவரும் ஒருவர், இப்படி 10 நாள் செய்தால் அவர் 10 எம்.ஜி. மாத்திரை உட்கொள்ளும் அளவிற்கு ரத்த அழுத்தம் குறையும்.
அதுமட்டுமல்ல, புற்றுநோய் உள்ளவர்கள் கோசாலையை சுத்தம் செய்து, இங்கு படுத்துவந்தால் அந்த நோயே சரியாகும். மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் வரட்டியை கொளுத்தினால் கொசு தொல்லையில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். நாம் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பசு உபயோகப்படுகிறது” என்று பேசினார்.
அப்போது விவசாயிகள் சிலர், உரிமையாளர்கள் இல்லாத மாடுகள் தங்கள் வயல்களை நாசப்படுத்திவிடுகிறது எனும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதற்கு அவர், “நம் தாய்க்கு நாம் சேவை செய்வதில்லை. அதன் காரணமாக சில இடங்களில் நம் தாய் தீங்கு விளைவிக்கிறாள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மக்களை கோசாலைகளுடன் இணைப்பதே நமது முயற்சி. மக்கள் தங்கள் திருமணநாள், குழந்தைகளின் பிறந்தநாள் ஆகிய தினங்களில் கோசாலையில் உள்ள மாடுகளுக்கு உணவளித்து அந்த தினத்தைக் கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்தார்.