நடுவானில் சண்டையிட்ட விமானிக்குத் தடை.

இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிட்னியிலிருந்து கொழும்பு சென்ற விமானத்தில் பெண் துணை விமானி கழிவறைக்குச் சென்றபோது அவரை வெளியே நிறுத்தி, விமானிகளுக்கான அறையை விமானி பூட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக இலங்கையின் குடிமை விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் விசாரணை முடிவு வெளியாகும்வரை அந்த விமானிக்கு விமானம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் கூறியது.

விமானி அறையில் விமானியுடன் வேறொரு சிப்பந்தி இருக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டே துணை விமானி வெளியே செல்லலாம் என்பது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டிய நடைமுறை.

பெண் துணை விமானி அவ்வாறு செய்யாததால் அவருக்கும் விமானிக்கும் இடையே சண்டை மூண்டதாக விமான நிறுவனம் சொன்னது.

விமானச் சிப்பந்திகள் கேட்டுக்கொண்டதற்குப் பிறகு துணை விமானியை அறைக்குள் அனுமதித்தார் அந்த விமானி.

அந்த ஏர்பஸ் ஏ330 வகை விமானம் பின்னர் சுமுகமாகத் தரையிறங்கியது.

நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஏற்கெனவே சேவைத் தாமதம், தொழில்நுட்ப ஊழியர்கள் பற்றாக்குறை போன்றவற்றால் திணறுகிறது.

கிட்டத்தட்ட 6,000 பேர் அந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.