மணிக்கு 280 கி.மீ.: அதிவேக ரயில் தயாரிப்பில் இந்தியா.
நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில் தொடர்பைக் கட்டமைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கனவு விரைவில் நனவாகப் போகிறது.
அதற்கேதுவாக, அதிவேக ரயில்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ‘பாரத் எர்த் மூவர்ஸ் லிமிட்டெட்’ (BEML) நிறுவனத்திற்கு இந்திய ரயில்வே வழங்கியுள்ளது.
அந்நிறுவனம் இந்தியாவிலேயே அதிவேக ரயில்களை வடிவமைத்துத் தயாரிக்கும் என்றும் அந்த ரயில்களின் சோதனையோட்ட வேகம் மணிக்கு 280 கிலோமீட்டராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிரூட்டி, சுழல் இருக்கை, சாய்விருக்கை, நடமாடச் சிரமப்படுவோருக்குச் சிறப்பு வசதிகள், தகவல் பொழுதுபோக்கு வசதிகள் எனப் பல அம்சங்களுடன் அந்த ரயில்கள் உருவாக்கப்படும்.
முதற்கட்டமாக, அத்தகைய இரண்டு ரயில்களை வடிவமைத்து, உருவாக்கி, பயன்பாட்டிற்குக் கொண்டுவர பெங்களூரு பிஇஎம்எல் நிறுவனத்திற்குச் சென்னை ஒருங்கிணைந்த ரயில் தொழிற்சாலை (ஐசிஎஃப்) ரூ.866.87 கோடிக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
ஒவ்வொரு ரயிலும் எட்டுப் பெட்டிகளைக் கொண்டிருக்கும். அந்த ரயில்களை 2026 ஆண்டிறுதிக்குள் பிஇஎம்எல் நிறுவனம் வழங்கவேண்டும்.
இந்தியாவின் முதலாவது அதிவேக புல்லட் ரயில் கட்டமைப்பை அகமதாபாத் – மும்பை ரயில் நிலையங்களுக்கு இடையே தேசிய அதிவேக ரயில் நிறுவனம் (NHRSCL) அமைத்து வருகிறது.