சென்னையில் பெய்த கனமழை காரணமாக பூமிக்குள் இறங்கிய அடுக்குமாடி கட்டிடம்
சென்னையில் பெய்த கனமழை காரணமாக அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி உள்வாங்கியுள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த 2 நாட்களாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அருகே அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு திடீரென உள்வாங்கியது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதி 10 அடி பூமிக்கடியில் சென்றுள்ளது. மேலும் கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால், கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் குடியிருப்பு வாசிகள் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அருகே கட்டப்பட்டும் வரும் பல அடுக்கு கொண்ட உணவகமும் இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் கூறி வருகின்றனர்.