‘சங்கு’ சின்னத்தைப் பயன்படுத்த எங்களுக்கு முழு உரித்து உண்டு! – யாழ். மாவட்ட வேட்பாளர் சுரேன் குருசாமி தெரிவிப்பு.
“தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவை வழங்கிய சங்கு சின்னத்தை நாங்கள் எடுத்தது நல்லதொரு விடயம். அதை நாங்கள் எடுப்பதற்கும் பாவிப்பதற்கும் எமக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றன.”
இவ்வாறு ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனநாயகத் தமிழ்க் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான சுரேன் குருசாமி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறுகையில்,
“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள், களமிறங்கி இருந்தாலும் தமிழ்த் தேசியத்துடன் பயணிக்கின்ற எமது கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கின்றது. நாம் செல்லும் இடமெல்லாம் சங்குக்கு ஆதரவு பெருகி வருகின்றது.
தமிழ்த் தேசியம் பேசி தங்கள் கட்சியைத் தென்னிலங்கையில் அடகு வைத்தவர்கள் இப்போது சங்குக்கு எதிராகப் பிரசாரம் செய்கின்றார்கள். அதேபோன்றே வீட்டுச் சின்னத்தையும் தூக்கி கொண்டு ஓடிப் போனவர்கள் சங்குக்குப் பெருகி வருகின்ற ஆதரவைப் பார்த்து சங்குக்கு எதிராகக் கூக்குரல் இடுகின்றனர்.
ஏனெனில் ஒட்டுமொத்த மக்களும் விரும்புகின்ற அடிப்படையில் எமது கூட்டணிச் செயற்படுவதால் இந்தத் தேர்தலில் தங்களை நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில்தான் வெறுமனே சங்குக்கு எதிராகக் கடும் பிரசாரம் செய்கின்றனர்.
அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் எடுத்துக் கொண்ட சங்கு சின்னத்தைச் சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அந்த அடிபடையில்தான் இப்போது எமது கூட்டணிக்கு எடுத்திருக்கின்றோம். அதுவும் பெரும்பாலானவர்களின் ஆதரவுடன் – ஒத்துழைப்புடன் சட்ட ரீதியாகத்தான் பெற்றுள்ளோம். ஆனால், அதைக் கூட சிலர் தமது தேவைகளுக்காகப் பொய்களைக் கூறி வருகின்றனர். அதேபோலவே சில கட்சிகளும் தேல்விப் பயத்தில் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர்.
உண்மையில் அந்தச் சங்கு சின்னத்தை நாங்கள் எடுக்காவிட்டால் அது இன்னொருவருக்குச் சென்றிருக்கும். ஆனால், தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவை வழங்கிய அந்தச் சின்னத்தை நாங்கள் எடுத்தது நல்லதொரு விடயம். அதை நாங்கள் எடுப்பதற்கும் பாவிப்பதற்கும் எங்குக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றன.
இதேவேளை, தெற்கில் ஏற்பட்ட மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றம் அல்ல என்பதனை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக அநுரவின் ஆட்சி என்பது கடந்த கால ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டைப் போலவேதான் உள்ளது என்பதை அவர்களே வெளிப்படுத்தி வருவதை அவதானிக்க வேண்டும்.
அவர்களின் பகிரங்க அறிவிப்புக்கள் என்ன என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அதனைவிடுத்து அந்தத் தரப்புகளோடு மட்டுமல்லாது தெற்கு கட்சிகளோடு பதவிகளுக்காகவும் சுய நலன்களுக்காகவும் நிற்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு தக்க பாடத்தைப் புகட்ட வேண்டும்.” – என்றார்.