ஜே.வி.பியினரும் மதுபானசாலைகளை பெற்றார்களா? – கீதநாத் சந்தேகம்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஜே.வி.பியினரும் மதுபான சாலைகளைப் பெற்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றஞ்சாட்டினார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட மதுபான சாலைகள் தொடர்பான விபரங்களை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வெளியிடுவேன் எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது சில வாரங்களுக்கு முன்னர் ஊடக சந்திப்பை நடத்திய அக்கட்சியின் பிரமுகர் வசந்த சமரசிங்க மதுபான சாலைகளைப் பெற்றவர்கள் மற்றும் சிபாரிசு செய்தவர்களின் விபரங்களை வெளியிடப்போவதாகச் சொன்னார்.
ஆனால், மூன்று வாரங்கள் கடந்தும் இதுவரை அந்தப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதன்மூலம் ஜே.வி.பியினரும் மதுபான சாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் 15 வருடங்களாக இணைந்து வேலை செய்கின்றேன். இதுவரை மதுபான சாலை அனுமதிப் பத்திரமோ, மதுபானப் போத்தலையோ நான் பெற்றதில்லை. எவருக்கும் பெற்றுக்கொடுத்ததும் இல்லை.” – என்றார்.