மன்னார் திருக்கேதீஸ்வரம், சதொச மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் 21ந் திகதி வரை ஒத்திவைப்பு.
மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் மற்றும் சதொச மனித புதைகுழிகள் தொடர்பான வழக்குகள் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (16.10) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 21ந் திகதி மீண்டும் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மன்னாரில் 2018 ஆம் கண்டு பிடிக்கப்பட்ட சதொச மனித புதைகுழி வழக்கு இம் மாதம் 7ந் திகதி தொடக்கம் 11ந் திகதி வரை வைத்திய கலாநிதி ராஜபக்ச குழுவினராலும் ராஜ்சோம தேவா குழுவினராலும் ஏற்கனவே இந்த மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் பொதி செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதிகளிலிருந்து மனித எச்சங்கள் வேறாகவும் இதனுடன் இப் புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட பிற பொருட்கள் வேறாகவும் கடந்த ஐந்து நாட்களும் பிரித்து எடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்டன.
மனித எச்சங்கள் வைத்திய கலாநிதி ராஜபக்சவினாலும், பிற பொருட்கள் பேராசிசிரியர் ராஜசோமதேவாவினாலும் பிரித்து எடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்டன.
அத்துடன் இக்காலப் பகுதியில் இந்தப் புதைகுழியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நான்கு இடங்களில் பரீட்சார்த்தமாகத் தோண்டிப் பார்க்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த பொதிகள் தொடர்பாக(16.10)புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இதில் அரச சட்டத்தரணி , காணாமல் போன உறவுகள் தொடர்பாக முன்னிலையாகி வரும் சட்டத்தரணிகள் , காணாமல்போனோர் சம்பந்தப்பட்ட அலுவலக உத்தியோகத்தர்களும் ஆஜராகி இருந்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்றினால் சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. அதாவது வைத்திய கலாநிதி ஹேவாவினால் பகுப்பாய்வு செய்யப்பட இருக்கும் மனித எச்சங்கள் இதில் இறப்புக்கான காரணம் , வயது எல்லை மற்றும் பால் தொடர்பில் பகுப்பாய்வு செய்து அறிக்கை செய்வதற்கு போதிய இட வசதி காணாமல் இருப்பதால் நீதிமன்றத்தினால் கட்டளை ஒன்று ஆக்கும்படி கேட்கப்பட்டது.
இதன் பிரகாரம் நேற்றைய தினம் (16.10)கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
இதற்கான அறிக்கை ஒன்றை மன்றில் சமர்பிக்குமாறும் அத்துடன் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கால எல்லைகள் சம்பந்தமாகவும் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்று மன்று கேட்டுள்ளது.
அத்துடன் இந்த சதொச மனித புதைகுழியை மீண்டும் அகழ்வு செய்யப்பட வேண்டுமா அல்லது தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டுமா எனவும் இது தொடர்பான அபிப்பிராயங்களைப் பேராசிரியர் ராஜசோமதேவா மற்றும் சட்டவைத்தியர் ராஜபக்ச இருவரும் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ந் திகதிக்கு முன்னர் சமர்பிக்க வேண்டும் என்றும் நீதி மன்றம் கோரியுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ந் திகதி அழைக்கப்பட இருக்கின்றது அத்துடன் பொதிகளை உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு கட்டளையாக்கப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு
2013 ஆம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி வழக்கும் புதன்கிழமை (16) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இவ் வழக்கில் வைத்திய கலாநிதி வைத்தியரத்தினா மற்றும் குற்றத்தடுப்புப் பாதுகாப்பு அதிகாரிகளும் காணாமல்போன உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகி வரும் சட்டத்தரணிகளும் அரச சட்டத்தரணியும் இவ்வழக்கில் முன்னிலையாகி இருந்தனர்.
இம் மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்டு பின் பகுப்பாய்வுக்காக பிரித்து பொதி செய்யப்பட்டிருக்கும் மனித எச்சங்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை சீ14 பரிசோதனைக்காக புளோரீடா அன்ரோபோலஜி நிறுவனத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை தொடர்பாக வைத்தியரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு நீதிமன்றினால் கட்டளை ஆக்கப்பட்டுள்ளது. வைத்திய கலாநிதி ஹேவேவினால் ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் அறிக்கைகள்நேற்று (16) மன்றில் சமர்பிக்க வேண்டி இருந்தது.
ஆனால் நேற்றைய (16.10)இவர் மன்றுக்குச் சமூகமளிக்காமையால் இந்த அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ந் திகதி தாக்கல் செய்யப்படுவதற்கு தவணை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பிரித்தெடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்பாகவும் எதிர்வரும் தவணையில் அறிவிக்கப்பட இருக்கிறது எனவும்
எனவே இந்த வழக்கும் நவம்பர் மாதம் 21ந் திகதி அழைக்கப்பட இருக்கின்றது எனவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக மனித புதைகுழி வழக்குகளில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மேலும் தெரிவித்தார்.
ரோகினி்நிஷாந்தன்