லெபனானிய நகராட்சி மன்றக் கட்டடம் மீது இஸ்ரேல் தாக்குதல் : மேயர் உட்பட 16 பேர் மரணம்.

லெபனானின் தென்பகுதியில் உள்ள நகராட்சி மன்றக் கட்டடம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16 பேர் மாண்டனர்.
மாண்டவர்களில் தென்லெபனானில் உள்ள முக்கிய நகரம் ஒன்றின் மேயரும் அடங்குவார்.
லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இதுவே லெபனானிய அரசாங்கக் கட்டடத்துக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலுக்கு லெபனானிய அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நபாட்டியே நகரில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இவ்வளவு நாள்களாக ஹிஸ்புல்லா போராளிகளைக் குறிவைத்த இஸ்ரேல் தற்போது லெபனான் மீது தாக்குதல் நடத்துவதை இத்தாக்குதல் நிரூபித்துள்ளதாக லெபனானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் இலக்குடன் நகரத்தின் சேவை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து நகராட்சி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது நகராட்சி மன்றக் கட்டடம் மீது இஸ்ரேல் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக லெபனானின் இடைக்காலப் பிரதமர் நஜிப் மிக்காத்தி கூறினார்.
இந்நிலையில், தென்லெபனானில் தங்கள் கண்காணிப்புக் கோபுரத்தைக் குறிவைத்து இஸ்ரேலியக் கவச வாகனம் சுட்டதாக அக்டோபர் 16ஆம் தேதியன்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அமைதிப்படையினர் தெரிவித்தனர்.
இதில் இரண்டு கண்காணிப்பு கேமராக்களும் கோபுரமும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரேலிய ராணுவம் கருத்து தெரிவிக்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க, லெபனான் எல்லைக்குப் பயணம் மேற்கொண்ட இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் யொவேவ் கெல்லன்ட், ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்று கூறினார்.
இதற்கிடையே, சிரியாவின் துறைமுக நகரமான லடாக்கியா மீது இஸ்ரேல் அக்டோபர் 17ஆம் தேதி காலை தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, அவ்விடத்தில் தீ மூண்டதாக சிரியா அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் செய்தி வெளியிட்டது.
இஸ்ரேலியப் போர் விமானங்களைத் தனது தற்காப்புப் படை எதிர்கொண்டதாக சிரியா கூறியது.