யாழ். வணிகர் கழகத்தினரைச் சந்தித்த சங்கின் பெண் வேட்பாளர்கள்!

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் போட்டியிடும் வன்னி மாவட்ட வேட்பாளரான முன்னாள் போராளி கருணாநிதி யசோதினி, யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் ஆகியோர் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரத்தைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலி்ல் பெண் வேட்பாளரின் முக்கியத்துவம், பெண்களை அரசியலில் ஈடுபடுத்துவதன் நோக்கம் மற்றும் பெண்கள் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பவை பற்றி கலந்துரையாடப்பட்டன.
யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் உறுப்பினர்கள், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவாளர்கள், போராளிகள் நலம்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் குழுமத்தினர் மற்றும் முன்னாள் போராளிகள் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.