வாட்ஸ்அப், இன்ஸ்டகிராமில் ஆட்குறைப்பு
வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவில் ஆட்குறைப்பு செய்யப்படலாம் என்று வெர்ஜ் அறிக்கை தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், நீண்டகால உத்திகளின் இலக்கு மற்றும் பணி இடத்திற்கான உத்திகளுக்கு ஏற்ப தமது குழு மாற்றங்களைச் செய்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஆட்குறைப்பும் இந்த மாற்றங்களில் அடங்கும் எனத் தெரிகிறது.
“சில குழுக்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது, சில ஊழியர்களுக்கு வெவ்வேறு வேலைகளை வழங்குவது உள்ளிட்டவை இதில் இருக்கும்,” என்று கூறிய அந்தப் பேச்சாளர், சில வேலைகள் அகற்றப்படும், அந்த வகையில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு இதர வாய்ப்புகளை வழங்க ஆன அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
ஆட்குறைப்பு செய்யப்படும் எண்ணிக்கை பற்றி வெர்ஜ் அறிக்கை தெரிவிக்கவில்லை. ஆனால் சிறிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்டா நிறுவனம் இது பற்றி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
மற்றொரு நிலவரத்தில் ஊழியர்களுக்கான $25 அன்றாட உணவு பற்றுச்சீட்டை பயன்படுத்தி முகப்பரு ஒட்டுவில்லை, ஒயின் குவளை, சலவைத் தூள் போன்ற வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கியதற்காக லாஸ் ஏஞ்சலிஸ் அலுவலகத்தில் 24க்கும் மேற்பட்ட ஊழியர்களை மெட்டா நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியதாக ஃபினான்ஷியல் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வேலை நீக்கம், குழு மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது என்றும் கடந்த வாரம் இந்த ஆட்குறைப்பு சம்பவம் நடந்தது என்றும் அது கூறியது.
இது குறித்து மெட்டா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
செலவுகளைக் குறைப்பதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் முதல் 21,000 ஊழியர்களை மெட்டா வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க், 2023ஆம் ஆண்டை செயல்திறன்மிக்க ஆண்டாக வருணித்திருந்தார்.
இவ்வாண்டு மெட்டா பங்குகளின் விலை 60 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.