ஈஸ்டர் தாக்குதல் குறித்து புதிய விசாரணை நடத்தப்படும் எனத்தான் கூறினோம் – கம்மன்பில பேச்சுக்கு விஜித ஹேரத் பதில்.
தமது கட்சி எதிர்க்கட்சியில் இருந்த போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புதிதாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்ததாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஈஸ்டர் தாக்குதல் குறித்து தெளிவான விசாரணையைத் தொடங்குவோம் என்று நாங்கள் கூறினோம். அதை இப்போது ஆரம்பித்துள்ளோம். மேலும் புதிய விசாரணையின் படி அந்தந்த குற்றவாளிகளுக்கு எதிராக கண்டிப்பாக சட்டத்தை அமல்படுத்துவோம் என இன்று சொல்கிறோம். அதைத்தான் அன்றும் இன்றும் சொல்கிறோம்.
கவனத்தை ஈர்க்க சிறு குழந்தைகள் தரையில் பொம்மைகளை அடிப்பார்கள். அதுபோல கம்மன்பில ஒரு குழந்தையைப் போல போராடுவதைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் அரசியலில் தோற்றுவிட்டார்கள். எனவே அவர்களை பற்றி அவ்வளவாகக் கவலைப்பட தேவையில்லை.
அவ்வப்போது உரிய விசாரணைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுப்போம். நாம் ஒவ்வொருவரின் குறுகிய அரசியல் தேவைகளுக்கு ஏற்ப அல்ல, பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் அவற்றைச் செய்கிறோம். விசாரணைகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். அவை குறுகிய காலத்தில் முடிக்கப்படும்” என்றார்.