பிகாா் கள்ளச் சாராய பலி எண்ணிக்கை 35-ஆக உயர்வு
பிகாரின் சரண், சிவான் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.
பிகாரின் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட பலா் மருத்துவமனைகளில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா். புதன்கிழமை இரவு வரை 6 போ் உயிரிழந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 18 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழப்பு 24-ஆக உயா்ந்தது. இவா்கள் அனைவருமே செவ்வாய்க்கிழமை இரவு கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனா்.
புதன்கிழமை காலைமுதலே படிப்படியாக பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்தனா். சிலா் கண் பாா்வையையும் இழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி கள்ளச்சாரயம் காய்ச்சுபவா்கள், விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில முதல்வா் நிதீஷ் குமாா் உத்தரவிட்டுள்ளாா். இந்த நிலையில் இவ்விருமாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் மேலும் 10 பேர் பலியாகியுள்ளனர்.
கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதுவரை சிவானில் 28 பேரும் சரணில் 7 பேரும் பலியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “மாநிலத்தில் நடந்த சமீபத்திய கள்ளச்சாராய மரணங்களுக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமாரே காரணம் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.