நீரின்றி அமையாது உலகு : சுவிசிலிருந்து சண் தவராஜா
இயற்கையின் படைப்பான மனிதன் இயற்கையைத் தனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு இன்றைய நவீன சொகுசான வாழ்க்கைக்கு வாழப் பழகிக் கொண்டுள்ளான். காட்டுமிராண்டிகளாக இருந்த காலத்திலிருந்து இன்றைய நாகரிக மனிதனாக மாறியது வரைக்குமான காலகட்டத்தில் பல்வேறு தேவைகள் மனிதனுக்கு இருந்து வந்துள்ளன. அந்தத் தேவைகளை இயற்கையின் துணையுடனும் சக மனிதர்களின் துணையுடனும் மனிதன் நிறைவேற்றி வந்திருக்கிறான். தனது தேவைகள் பலவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல வேளைகளில் இயற்கையோடும், சக மனிதர்களோடும் போராட வேண்டிய தேவை மனிதனுக்கு இருந்தது. இயற்கைக்கும் மனிதனுக்குமான போராட்டம் நெடியது. ஒரு கட்டத்தில் இயற்கையை முழுவதுமாக வெற்றி கொண்டு விட்டதாக மனிதன் கருதிய வேளையில் இயற்கை மனிதனைக் கைவிட ஆரம்பித்தது. அது இயற்கையின் சீற்றமாக மாறி மனிதனைப் பழிவாங்கத் தொடங்கியது.
இயற்கை தன்னைக் கைவிடத் தொடங்கிவிட்டதை மனிதன் அறிந்துகொண்ட போதிலும், இயற்கைக்கு விளைவிக்கப்பட்ட தீங்குகளைச் சரிசெய்தவாறே இயற்கையின் சமநிலை கெடாமல் அதனைப் பேணுவது ஒன்றே மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதைத் தெரிந்துகொண்ட பின்னரும் இயற்கைக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவோ, ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புக்களைச் சீர் செய்யவோ மனிதன் முழுமனதுடன் முயற்சிகளை எடுக்கவில்லை. வெறுமனே மாநாடுகளைக் கூட்டுவதும் பேசிக் கலைவதும் போதும் என நினைத்து அரசாங்கங்கள் செயற்பட்டுவரும் நிலையில் ஒட்டுமொத்த மானுட சமூகமும் இயற்கையின் சீற்றத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இன்றைய நவீன உலகில் மனிதனின் தேவைகளைப் பட்டியலிட முடியாது. அத்தகைய பட்டியல் மிகமிக நீளமானது. ஆனால் சுவாசத்துக்கான காற்று, குடிப்பதற்கான நீர் மற்றும் உயிர்வாழத் தேவையான உணவு என்பவை இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது என்பதே உண்மை. இயற்கை வழங்கியவற்றில் காற்றும் நீரும் இன்றுவரை அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவையாக உள்ளன.
காற்று மாசு காரணமாக உலகின் சில நாடுகளில் சுவாசிப்பதற்குத் தேவையான காற்றை புட்டிகளில் அடைத்து கையில் கொண்டு செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதேபோன்று சுத்தமான குடிநீரின் தட்டுப்பாடு காரணமாக புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீரை நம்பி வாழ வேண்டிய தேவை பெரும்பாலான மக்களுக்கு உள்ளது. இதனை வேறு வகையில் சொல்வதானால் இயற்கை நமக்களித்த கொடையான காற்றும் குடிநீரும் இன்று விற்பனைப் பண்டங்களாக ஆகிவிட்டன என்பதே உண்மை.
சுத்தமான குடிநீருக்கான தட்டுப்பாடு இன்று உலகின் பல பாகங்களிலும் நிலவுகின்றது என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. பூகோளத் தட்பவெட்ப நிலை காரணமாக உலகின் சில பாகங்களில் காணப்படும் குடிநீருக்கான இயற்கையான தட்டுப்பாட்டைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் வணிக நோக்கங்களுக்காக சில இடங்களில் குடிநீருக்கான செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு வருவதையும் நாம் அறிவோம்.
ஒட்சிசன் மற்றும் ஐதரசன் ஆகிய மூலக்கூறுகளின் சேர்க்கையாலேயே நீர் உருவாகிறது என்பதே அறிவியல். ஆனால் அதனைச் செயற்கையாக உருவாக்கி தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் இடத்தில் மனிதகுலம் இல்லை என்பதே உண்மை.
ஒருசில நாடுகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இது எவ்வளவு காலத்துக்குச் சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. அதேபோன்று, உலக மாந்தர்கள் அனைவரதும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யுமா என்பதுவும் சந்தேகமே.
அறிவியல் வளர்ச்சி காரணமாக இன்று உலகில் மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ள சூழலில் குடிநீரின் தேவையும் அதிகரித்து உள்ளது. போதிய மழைவீழ்ச்சி, மழைநீரைக் காவிச் செல்லும் ஆறுகள், நதிகள் மற்றும் மழைநீரைத் தேக்கி வைத்திருக்கும் பனிமலைகள் என்பவை குடிநீரின் மூலங்களாக உள்ளன. ஆனால், இவை முன்னரைப் போல இல்லை என்கின்றன ஆய்வுகள். இந்தப் போக்கு நீடிக்குமானால் மனிதன் குடிநீருக்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். அத்தகைய ஒரு சூழ்நிலையில் வல்லமை மிக்க நாடுகள் உலகின் நீர் மூலங்களைத் தம்வசப் படுத்திக் கொள்ள முயற்சிக்கக் கூடும். அப்போது குடிநீருக்கான போர்கள் தவிர்க்க முடியாதவையாக அமையும்.
உலக வளிமண்டல ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை அத்தகைய நாள் வெகு தூரத்தில் இல்லை என்ற அச்சத்தை உருவாக்குவதாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கிளை நிறுவனமான இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் உலகளாவிய அடிப்படையில் அதிகரித்துவரும் புவி வெப்பமாதல் காரணமாக உலகின் பல பாகங்களிலும் ஆறுகளில் நீர் வரத்து குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளின் பிரகாரம் கடந்த வருடத்தில் ஆறுகளின் நீர்ப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. தொடர்ச்சியாகக் கடந்த ஐந்து வருடங்களாக அவதானிக்கப்படும் இந்தப் போக்குக் காரணமாக ஆறுகளின் நீரோட்டம் குறைந்துள்ள காரணத்தால் நீரேந்து பகுதிகளில் நிரம்பும் நீரின் அளவும் கணிசமாகக் குறைந்துள்ளது.
தொடர்ச்சியாக நிலவும் வரட்சி காரணமாக வட, மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பிராந்தியங்களில் உள்ள மிசிசிப்பி மற்றும் அமேசன் ஆற்றுப் படுக்கைகளில் கடந்த 33 வருடங்களில் இல்லாத அளவு நீர் மட்டம் குறைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய நதிகளான கங்கை மற்றும் மீக்கொங் நதிகளின் நீர்ப்படுக்கைகளிலும் சராசரிக்கும் குறைவான நீரின் அளவே அவதானிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் உலகின் 50 விழுக்காடு பாரிய நீர்ப்படுக்கைகளில் இயல்புக்கு மாறான நிலைமையே அவதானிக்கப்பட்டுள்ளது.
”எங்கள் காலத்தில் காலநிலைக்கு ஏற்பட்டுள்ள மிகப் பாரிய இடர்பாட்டின் காட்டியாக நீர்த் தேக்கங்கள் உள்ளன. ஆனாலும் ஒரு பூகோள சமூகமாக இந்த நீர்த்தேக்கங்களைப் பாதுகாக்க நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை” என்கிறார் உலக வளிமண்டல ஆய்வு நிறுவனத்தின் செயலாளர் நாயகமான செலஸ்ரே சவுலோ அம்மையார். காலநிலை மாற்றம் காரணமாக நீர்ச்சுழற்சியானது தொடர்ச்சியாக ஒழுங்கற்ற தன்மையுடையதாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே அவை தொடர்ச்சியான அவதானிப்புக்கு உட்படுத்தப்படுவதுடன் அவதானிக்கப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பரிகார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் அவர்.
இன்றைய நிலையில் உலகளாவிய அடிப்படையில் 3.6 பில்லியன் மக்கள் வருடத்தில் ஒரு மாத காலமேனும் போதிய குடிநீர் இன்றி கஸ்டங்களை அனுபவிக்கின்றார்கள் என்கிறது ‘ஐநா நீர்’ என்ற காலநிலை முகவரகம். இன்றைய நிலை நீடித்தால், 2050இல் இந்த மக்களின் தொகை 5 பில்லியனாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கிறது அந்த நிறுவனம்.
உலகில் கடந்த வருடம் நிலவிய அதிகரித்த வெப்பநிலை காரணமாக கடந்த 50 வருடங்களில் காணாத அளவில் பனிமலைகள் வேகமாக உருகியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இவ்வாறு பனிமலைகள் உருகியதால் கடந்த வருடத்தில் மாத்திரம் 600 கிகா தொன் நீர் வழிந்தோடியுள்ளது. ஐரோப்பா மற்றும் ஸ்கன்டிநேவியா பிராந்தியங்களில் இவ்வாறு வழிந்தோடிய நீரினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உருவாகி அதனாலும் மனிதர்கள் பாதிக்கப்படும் நிலை உருவானது.
பனிமலைகள் உருகும் நிலை தொடருமானால் உலகில் பனிமலைகளே இல்லாத நிலை தோன்றக் கூடும். அத்தகைய ஒரு நிலை உருவாகுமிடத்து இயற்கையின் சமநிலை வெகுவாகச் சீர்குலைவதுடன் மனிதனுக்குத் தேவையான குடிநீருக்கும் தட்டுப்பாடு உருவாகலாம்.
குடிப்பதற்கு நீரின்றி மனிதனால் வாழ முடியுமா? கற்பனை செய்வதற்கே அச்சமாக இருக்கிறது. இது தொடர்பில் நானும் நீங்களும் கவலைப்பட்டு என்ன ஆகப் போகின்றது அதிகார மையத்தில் அமர்ந்திருப்பவர்கள் பாராமுகமாக இருக்கையில்?