நடிகை தமன்னாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை.
நடிகை தமன்னாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எச்பிஇஸட் டோக்கன் (HPZ Token) என்னும் கைப்பேசிச் செயலிக்குச் சொந்தமான நிறுவனம் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக அந்த விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அந்தச் செயலி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நடிகை தமன்னாவுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது.
அதனை ஏற்று, வியாழக்கிழமை (அக்டோபர் 17) பிற்பகலில் அஸ்ஸாம் மாநிலம் கெளகாத்தியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமன்னா தன் பெற்றோருடன் முன்னிலையானார்.
அவரிடம் அதிகாரிகள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமன்னா, 34, மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வழக்கில் இதுவரை 76 சீன நிறுவனங்கள் உட்பட மொத்தம் 299 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களிடம் பண மோசடி செய்வதற்காகவே இந்தச் செயலி பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.