9 தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 600 மில்லியன் இந்திய ரூபா நிதி உதவி !

அரசாங்கத்தின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பெருந்தோட்டங்களின் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா தனது நிதி உதவி மானியத்தை 600 மில்லியன் ரூபாவாக இரட்டிப்பாக்கியுள்ளது.

நேற்று (18) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கையின் கல்வி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜே.எம். திலகா ஜயசுந்தர அவர்கள் கையொப்பமிட்டு, இராஜதந்திர ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர்.

அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட 9 பாடசாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் இத்திட்டத்தில் மத்திய மாகாணத்தில் 6 பாடசாலைகளும் ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இந்த முயற்சியானது இலங்கையுடனான இந்தியாவின் பரந்த அபிவிருத்தி பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாகும் என அறிவித்துள்ளது.

குறிப்பாக கல்வித் துறையிலான, முந்தைய இந்திய வளர்ச்சித் திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட பாடசாலைகளை புனரமைத்தல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் 40 மின் நூலகங்களை நிறுவுதல், நாடளாவிய ரீதியில் கல்வி நிலையங்களுக்கு 110 பேரூந்துகளை வழங்குதல், அனைத்து மாகாணங்களிலும் ஆங்கில மொழி ஆய்வு கூடங்களை நிறுவுதல், கேட்போர் கூடங்களை நிர்மாணித்தல் மற்றும் புனரமைத்தல். ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் ஞாபகார்த்த கேட்போர் கூடம், மத்திய மாகாணத்தில் பொலன்னறுவையில் பல்லின, மும்மொழிப் பாடசாலை நிர்மாணம், ஹட்டனில் (மத்திய மாகாணம்) தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏனைய தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஆதரவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவுதல் மற்றும் காலியில் (தென் மாகாணம்) 200 பாடசாலைகளில் கணினி ஆய்வகங்கள் முன்னர் இந்தியாவின் நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களில் சில பகுதிகளாகும்.

Leave A Reply

Your email address will not be published.