பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது!
மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் மும்பை பாந்த்ரா அருகே நிர்மல் நகரில் கடந்த 12-ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் ஐந்து தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கில் 4 பேர் மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
பாபா சித்திக்கை ஏற்கனவே 10 முறை கொலை செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் அப்போது வெவ்வேறு காரணங்களால் அந்த திட்டம் நிறைவேறவில்லை எனவும் அந்த வாக்குமூலத்தில் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் மேலும் 5 பேரை கைது செய்துள்ளனர்.
கைதான 5 பேருக்கும் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, கைதான ஐவருக்கும் 12 நாட்கள் போலீஸ் காவல் கோரப்பட்டது.
ஆனால், அவர்களை வரும் 25-ஆம் தேதி வரை விசாரிக்க மும்பை நீதிமன்றம் ஆணையிட்டது. பாபா சித்திக் கொலை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.