இளநிலை மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் – மமதா பானர்ஜி கோரிக்கை
இளநிலை மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா, ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் இரவுநேரப் பணியிலிருந்த பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். இக்கொலைக்கு நீதி கோரி, இளநிலை மருத்துவா்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் 42 நாள்கள் நீடித்தது.
அரசின் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து மருத்துவா்கள் பகுதியாக பணிக்குத் திரும்பினா். இந்நிலையில், உறுதிமொழியைக் காக்க மாநில அரசு தவறிவிட்டதாக கூறி, மருத்துவா்கள் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் தொலைப்பேசி வாயிலாக பேசிய முதல்வர் மமதா, உங்கள் கோரிக்கைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் அவகாசம் வேண்டும்.
அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. ஆனால் அது சுகாதார சேவைகளை பாதிக்கக்கூடாது. தயவுசெய்து உண்ணாவிரதத்தை கைவிடுங்கள். சில கோரிக்கைகளுக்கு கொள்கை முடிவுகள் தேவை. நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்போம்.
ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிடுவது ஏற்கத்தக்கது அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.