போர் முடியும்வரை பிணைக்கைதிகளுக்கு விடுதலை இல்லை : ஹமாஸ்
காஸா போர் முடியும் வரை 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பிடிபட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று அக்டோபர் 18ஆம் தேதியன்று ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 16ஆம் தேதியன்று ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வரை இஸ்ரேலிய ராணுவம் கொன்றது.
இதையடுத்து, ஹமாஸ் துக்கம் அனுசரித்து வருகிறது.
யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை அடுத்து, போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலியப் பிணைக்கைதிகளுக்கும் காஸாவில் கடும் துயருக்கு ஆளாகியிருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பப்பட்டது.
ஆனால், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை பிணைக்கைதிகளை விடுவிக்கப்போவதில்லை என்று கத்தாரை மையமாகக் கொண்ட ஹமாஸ் அதிகாரி கலில் அல் ஹய்யா காணொளி மூலம் தெரிவித்தார்.
இந்நிலையில், அக்டோபர் 18ஆம் தேதியன்று காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தது.
இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இடிபாடுகளிலிருந்து மூன்று சிறுவர்களின் சடலங்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டதாக காஸாவின் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இதற்கிடையே, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை அக்டோபர் 17ஆம் தேதியன்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியது.
சின்வரின் மரணம் போரின் முடிவல்ல என்றும் முடிவின் தொடக்கம் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறினார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
இதில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் போராளிகள் பலரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
அந்தத் தாக்குதலுக்கு யாஹ்யா சின்வர் மூளையாகச் செயல்பட்டார் என்று கூறப்படுகிறது.
சின்வருக்கு முன்பு ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் இருந்தபோது கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதியன்று கொல்லப்பட்டார்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பின் தலைவராக சின்வர் பொறுப்பேற்றார்.
தலையில் குண்டடிபட்டு சின்வர் உயிரிழந்ததாக இஸ்ரேல் நடத்திய உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளதாக அக்டோபர் 18ஆம் தேதியன்று தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
கவச வாகனம் அல்லது ஏவுகணைத் தாக்குதலில் சின்வர் முதலில் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவரது கரத்தில் காயம் ஏற்பட்டதாக உடற்கூராய்வை நடத்திய மருத்துவரான டாக்டர் சென் குகேல் தெரிவித்தார்.
ரத்தக் கசிவைத் தடுக்க தமது கரத்தைச் சுற்றி சின்வர் மின்வடம் ஒன்றைக் கட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், காயம் மோசமாக இருந்ததால் அது பலனளிக்கவில்லை என்று அறியப்படுகிறது.
இதையடுத்து, அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக டாக்டர் குகேல் கூறினார்.