10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இவ்வாரம் 70 போலி அழைப்புகள்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 10க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ‘இந்தியா டுடே’ ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் விமான நிறுவனங்களைச் சேர்ந்த தலா ஐந்து விமானங்கள் இந்த வெடிகுண்டு மிரட்டல்களால் பாதிக்கப்பட்டன.
இதுபோல் புரளியான மிரட்டல்கள் வந்தவண்ணம் இருப்பது இந்திய விமான நிறுவனங்களைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.
இம்முறை டெல்லி – லண்டன் விஸ்தாரா விமானம், நியூயார்க் – மும்பை ஏர் இந்தியா விமானம், துபாய் – ஜெய்ப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகிய மூன்று விமானங்களுக்கு அத்தகைய மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) இரவிலிருந்து சனிக்கிழமை காலைக்குள் அம்மிரட்டல்கள் வந்தன.
டெல்லியிலிருந்து லண்டன் புறப்பட்ட விஸ்தாரா விமானம் மிரட்டல் காரணமாக ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது. அங்கு முழுமையான சோதனை மேற்கொண்ட பிறகு அவ்விமானம் மீண்டும் லண்டனுக்குக் கிளம்பிச் சென்றது.
மிரட்டலால் நியூயார்க் – மும்பை ஏர் இந்தியா விமானம் தாமதமாகப் புறப்பட நேரிட்டது. அதுபோல, துபாயிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தனித்தடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெடிகுண்டு பீதி காரணமாக இந்தியன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று நேற்று (19) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இந்திய விமான நிறுவனங்களின் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களுக்கு 70க்கும் மேற்பட்ட புரளி மிரட்டல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற புரளிகளைச் சமாளிக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சும் அதிகாரிகளும் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.
போலியாக மிரட்டல் விடுப்பவர்களை ஐந்தாண்டு காலத்திற்கு ‘நோ-ஃப்ளை’ பட்டியலில் வைப்பதற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் போலி மிரட்டல்களில் பயன்படுத்தப்படும் ‘இரத்தம் எங்கும் தெறிக்கும்’, ‘இது நகைச்சுவை அல்ல’ போன்ற சில பொதுவான சொற்றொடர்களை விசாரணை அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன.
இருப்பினும், 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதைத் தவிர மிரட்டல் விடுத்த மற்றவர்கள் குறித்து விசாரணையில் வேறு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மத்திய சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறுகையில், “பெரும்பாலான அழைப்புகள் சிறுவர்கள், குறும்புக்காரர்களால் செய்யப்பட்டவை.
“நான்கு விமானங்களுக்கு திங்கட்கிழமை மிரட்டல் விடுத்ததற்காக 17 வயது சிறுவனை மும்பை காவல்துறை புதன்கிழமை கைது செய்தது.
“எதிர்காலத்தில் இதுபோன்ற புரளி வெடிகுண்டு அழைப்புகள் வராமல் இருப்பதை உறுதி செய்வதற்காக விதிமுறைகள், சட்டங்களில் மாற்றங்களைப் புகுத்த தனது துறை பரிசீலித்து வருகிறது,” என்று கூறினார்.