தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் மகன் மணிமன்றவாணன் காலமானார்.

தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் மகன் மணிமன்றவாணன் காலமானார். அவருக்கு வயது 78.

உடல்நலக் குறைவு காரணமாக அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தமிழக அரசின் இதழான ‘தமிழரசு’ மாத இதழில் பதிப்பாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மணிமன்றவாணன், தனது தந்தை காலமாகும்வரை திருமணம் செய்யாமல், அவருக்குத் துணை நின்றார்.

பாவாணரின் மறைவுக்குப் பிறகே, தனது திருமண வாழ்வை அமைத்துக்கொண்ட இவருக்கு இமானுவேல் தேவநேயன் என்ற மகன் உள்ளார்.

பாவாணரின் வாழ்க்கை வரலாற்றைப் ‘பாவாணர் நினைவலைகள்’ என்ற நூலாக எழுதி வெளியிட்ட மணிமன்றவாணன், தனது தந்தை இறுதியாகப் பணியாற்றிய சென்னையில் சிலை வைத்து அவரைப் பெருமைப்படுத்தவேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதை ஏற்று, அரசின் சார்பில் பாவாணருக்குச் சென்னையிலே மணிமண்டபமும் சிலையும் வைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், மணிமன்றவாணன் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை மாலை சென்னையில் காலமானார்.

இந்நிலையில், மணிமன்றவாணனின் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தமிழுக்குத் தொண்டு செய்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் வழித்தோன்றலான மணிமன்றவாணன் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்,” என்று அவர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.