காஸாவில் இஸ்ரேலியத் தாக்குதலால் 73 பேர் கொல்லப்பட்டனர்: ஹமாஸ் அறிவிப்பு.
காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள பெய்ட் லாஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதலில் 73 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பலர் காயமடைந்ததாகவும் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
சனிக்கிழமை (அக்டோபர் 19) இரவு குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.
ஆனால் ஹமாஸ் அதிகாரிகள் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறுவதாகச் சொல்கிறது இஸ்ரேல்.
பாதிக்கப்பட்டோர் குறித்த தகவல்களைச் சரிபார்த்து வருவதாகவும் தனது ராணுவத்திடம் உள்ள தகவல்களுடன் ஹமாஸ் கூறும் எண்ணிக்கை ஒத்துப்போகவில்லை என்று இஸ்ரேல் சொன்னது.
இவ்வேளையில், லெபனானிலும் சண்டை தொடர்கிறது.
பெய்ரூட் நகரின் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் குண்டுகளை வீசியதாகக் கூறப்பட்டது. இரண்டு பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
காஸாவிலும் லெபனானிலும் 175 ‘பயங்கரவாத இலக்குகளைக்’ குறிவைத்துத் தனது ஆகாயப்படை சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.
பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா உளவுப்பணித் தலைமையகத்தின் மீது ஆகாயப்படை தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. அத்தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி அல்-ஹஜ் அப்பாஸ் சலாமா கொல்லப்பட்டதாகவும் அது கூறியது.
இதற்கிடையே, காலம் கடந்துவிடுமுன் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தும்படி காஸாவின் வடபகுதியிலுள்ள மருத்துவர் ஒருவர் கோரியுள்ளார்.
பெய்ட் லஹியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் நான்கைந்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரைமட்டமானதாக அவர் சொன்னார்.
ஒரு பெரிய குடியிருப்பு வட்டாரம் முழுவதையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலிய ராணுவம் தயாராகி வருவதாக அமெரிக்காவில் கசிந்த அண்மைய செயற்கைக்கோள் படங்களின் , உளவுத் தகவல் ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.