அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்னர், இரு வேட்பாளர்களில் எவருக்கும் சாதகமான நிலை இருக்காது எனக் கருத்துக்கணிப்புகள் கூறும் வேளையில், இருதரப்பினரும் ஒவ்வொரு வாக்குக்காகவும் கடுமையாகப் போட்டி போடுகின்றனர்.

தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சில முக்கிய மாநிலங்களிலும், தேசிய அளவிலும், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையே இடைவெளி மிகக் குறுகியதாக இருக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

தங்கள் வேட்பாளருக்கு வலுவான முன்னிலை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஜனநாயக, குடியரசுக் கட்சியினர் ஆகிய இருதரப்புக்கும்இடையே தற்போதைய நிலை தலைவலியைத் தந்துள்ளது.

எந்தவொரு சுயேட்சை பகுப்பாய்வாளராலும் தேர்தல் முடிவை உறுதியாகக் கணிக்க முடியவில்லை.

தேர்தல் தினமான நவம்பர் 5ஆம் தேதியையும் தாண்டி, தேர்தல் முடிவை எதிர்த்து முறையிட சட்ட ரீதியான போராட்டங்கள் ஏற்படலாம் எனப் பெரும்பாலானோர் முன்னுரைக்கின்றனர். டிரம்ப் தோற்றால் அவரின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடும் மோசமான நிலவரங்களும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

நாட்டு நிலவரத்தை யாரால் சரிசெய்ய முடியும் என்பதைவிட, நாடு “தவறான திசையில்” செல்வதாக கூடுதலான அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.

மனுவில் கையெழுத்திடுபவருக்கு தினமும் US$1 மி. வெகுமதி
இதற்கிடையே, அமெரிக்க அரசியலமைப்பை ஆதரித்து தம் இணைய மனுவில் கையெழுத்திடுபவர்களுக்கு, நவம்பரில் நடைபெறும் அதிபர் தேர்தல் வரை ஒவ்வொரு நாளும் US$1 மில்லியன் வழங்குவதாக அமெரிக்க பெருஞ்செல்வந்தர் எலன் மஸ்க் உறுதியளித்துள்ளார்.

தம் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றும் விதமாக, குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்களை அணிதிரட்டும் நோக்கில், பென்சில்வேனியாவில் தம் நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவருக்கு US$1 மில்லியன் காசோலையை வழங்கினார்.

டிரம்ப்புக்கும் ஹாரிசுக்கும் இடையே நிலவும் கடும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த செல்வாக்கு செலுத்த மஸ்க் தம் அசாதாரணமான செல்வத்தைப் பயன்படுத்தியதற்கான அண்மைய எடுத்துக்காட்டு இந்தப் பணம்.

ஹாரிஸ் வென்றால், அதுவே “கடைசித் தேர்தலாக இருக்கும்” என சனிக்கிழமை (அக்டோபர் 19) மஸ்க் சொன்னார்.

Leave A Reply

Your email address will not be published.