ஒரு வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
நாடு முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடரும் வெடிகுண்டு மிரட்டல்
ஆயுதப் பூஜை, துர்கா பூஜை, தீபாவளி எனப் பல்வேறு பண்டிகையின் காரணமாக கடந்த 10 நாள்களாக உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் விமானங்களில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுகின்றது.
இந்த நிலையில், அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா, ஆகாசா உள்ளிட்ட நாட்டின் முன்னணி விமான நிறுவனங்களின் 90-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மிரட்டல் விடுக்கப்பட்ட விமானங்கள் அனைத்தும் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்ததில், அச்சுறுத்தல்கள் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், விமானங்கள் சரியான நேரத்தில் இயக்க முடியாதது, அவசர தரையிறக்கத்தால் விமான நிலையங்களின் அட்டவணை சீர்குலைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் விமானப் போக்குவரத்து துறையும் பயணிகளும் கவலை அடைந்துள்ளனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு
விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, பண்டிகை காலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பயணிகள் மற்றும் பிற ஊழியர்கள் தீவிர சோதனைக்கு பிறகே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.