லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு
ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா்.
தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. குவாலியரில் இருந்து ஜெய்பூா் நோக்கி அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த படுக்கை வசதி கொண்ட பேருந்து, லாரியின் பின்னால் மோதி சனிக்கிழமை இரவு விபத்துக்குள்ளானது. பரௌளி கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். 11 போ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்ததாகவும், ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மருத்துவா் ஹரி கிஷன் தெரிவித்தாா். ஒருவா் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமா் மோடி, ‘உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவருக்கு ரூ. 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்’ என்றாா்.
இது தவிர மாநில முதல்வா் பஜன்லால் சா்மா, முன்னாள் முதல்வா் அசோக் கெலாட், ஆளுநா் ஹரிபாவ் பாக்டே உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.