தமிழகத்தில் இணையம்வழி ரூ.14 கோடி மோசடி; இணைத் தயாரிப்பாளர் உட்பட அறுவர் கைது
இணையவழி வணிகம் மூலம் பெரும்பணம் ஈட்டலாம் என ஆசைகாட்டி, ரூ.14 கோடி மோசடி செய்த அறுவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் திரைப்பட இணைத் தயாரிப்பாளர் ஒருவரும் அடங்குவார் என்று தமிழக ஊடகச் செய்தி தெரிவித்தது.
அந்த மோசடிக் கும்பல், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வாட்ஸ்அப் வாயிலாக சென்னைவாசி ஒருவரை அணுகியது. ‘பிளாக் ராக்’ மேலாண்மை வணிகக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட அக்கும்பல், ‘பிளாக் ராக்’கில் முதலீடு செய்தால் இரண்டே மாதங்களில் ஐந்து மடங்கு லாபம் ஈட்டிவிடலாம் என ஆசைகாட்டியது.
அந்நிறுவனம் இந்தியப் பங்கு, பரிவர்த்தனை வாரியத்தின் அனுமதி பெற்றது என்றும் அவர்கள் கூறினர். ஒருவழியாக அந்தச் சென்னைவாசியை நம்பவைத்த அவர்கள், அவரை ஒரு குறிப்பிட்ட கைப்பேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்யச் சொல்லி, அதன்மூலமாக முதலீடு செய்ய வைத்தனர்.
முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காததை அடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். உடனே அவர், தேசிய இணையக் குற்ற இணையத்தளம் வழியாகப் புகாரளித்தார். அதன் தொடர்பில் தமிழகக் காவல்துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையின் அடிப்படையில், மோசடி செய்யப்பட்ட பணம் வரவு வைக்கப்பட்ட 13 வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்பட்டன. செங்கல்பட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கைதானார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஐவர் கைதாகினர்.
குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட வடமாநிலக் கும்பலைப் பிடிக்கவும் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கவும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.