மக்களுக்கு இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.
கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கு இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
கொரோனா ஒழிப்பு செயற்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டுமென இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சவேந்திரசில்வா மேலும் கூறியுள்ளதாவது, “மினுவங்கொடை கொரோனா கொத்தணியிலிருந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சிலர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனும் சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான பலர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கண்டறியப்பட்டுள்ளனர்.
எனவே, அனைவரும் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொள்கிறோம். தற்போது அனைத்து முதலாவது தொற்றாளர்களையும் நாம் கண்டறித்து சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளோம்.
எனினும், இரண்டாவது மூன்றாவது தொற்றாளர்களை கண்டறிவதுதான் சற்று கடினமானதாக உள்ளது. சிலருக்கு இந்தத் தொற்று எவ்வாறு வந்தது என்றுக்கூட தெரியாத நிலைமை உள்ளது.
நாம் தற்போது அனைத்து தொற்றாளர்களையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளோம். சிலர் மதஸ்தலங்கள் தொடர்பாக கேள்வி எழுப்புகிறார்கள். நாம் மதங்களை மதிப்பவர்கள். எனினும், முடிந்தளவுக்கு சன நெருக்கடியான இடங்களுக்கு செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குறைந்தது இந்த இரண்டு வாரங்களுக்கேனும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல் எமக்கான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.