கிளிநொச்சி ஜெயபுரத்தில் 100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.

கிளிநொச்சி ஜெயபுரம் மக்களிற்கு சொந்தமான 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது. ஜெயபுரம் மக்களால் 520 ஏக்கர் காணி கோரப்பட்டு வந்த நிலையில் இன்று 100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியானது பூநகரி பிரதேச செயலகம் ஊடாக மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
1980ம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த பகுதியில் மக்கள் குடியேற்றப்பட்டனர். இதன்போது அவர்களிற்கு தலா 1 ஏக்கர் வயற்காணி வழங்குவதாக கூறப்பட்டது. இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக காணியை மக்களால் பராமரிக்க முடியவில்லை. இந்த நிலையில் குறித்த காணிகள் பற்றை காடுகளாக மாற்றம் பெற்றது. இந்த நிலையில் குறித்த காணியில் செய்கையை ஆரம்பிக்க வனவள பாதுகாப்பு திணைக்களம் தடை விதித்திருந்தது.
இவ்வாறான நிலையில் மக்களால் பல்வேறு தரப்பிடமும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.