தவறி வீழ்ந்த கைப்பேசியால் பாறைகளுக்கிடையே தலைகீழாகச் சிக்கிக்கொண்ட பெண் ஏழு மணிநேரத்தின் பின் மீட்பு!
தவறி வீழ்ந்த கைப்பேசியை எடுக்கப் போய் இரண்டு பெரும் பாறைகளுக்கிடையே சிக்கிக்கொண்ட ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் மீட்புப் பணியாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
மடில்டா கேம்பல் என்ற அந்த மலையேறி, நியூ சவுத் வேல்சின் ஹண்டர் வேலி பகுதியில் நடந்துசென்றபோது மூன்றடி ஆழமுடைய சந்துக்குள் விழுந்து தலைகீழாக ஏழு மணி நேரம் தொங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே,மீட்கப்பட்டுள்ளார்.
கேம்பலின் நண்பர்கள் அவரை விடுவிக்க எவ்வளவோ முயன்றும், சந்தின் மிக ஆழத்தில் அவர் சிக்கிக்கொண்டதால் உதவிக்காக மீட்புப் பணியாளர்களை அழைத்தனர்.
ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட படங்களில், சிக்கிக்கொண்ட பெண் மடில்டா கேம்பலின் பாதங்கள் மட்டுமே தெரிந்தன.
மீட்புப் பணியாளர்கள் 500 கிலோ பாறை ஒன்றை எப்படியோ தளர்த்தியும், வளைவான ஓர் இடுக்கில் கேம்பல் சிக்கியிருந்ததால் அவரை விடுவிக்க மிகவும் சிரமப்பட்டனர். இறுதியில், சிறு காயங்களுடன் கேம்பல் மீட்கப்பட்டார்.
நியூ சவுத் வேல்சின் அவசர மருத்துவ வண்டிச் சேவையுடன் மருத்துவ உதவியாளராக உள்ள பீட்டர் வாட்ஸ் கூறுகையில், மீட்பு மருத்துவ உதவியாளராக எனது பத்தாண்டு அனுபவத்தில், இதுபோன்ற ஒரு மீட்புப் பணியில் நான் ஈடுபட்டதில்லை. இது சவால்மிக்கதாகவும், இறுதியில் மனநிறைவாகவும் இருந்தது,” என்றார்.